Last Updated : 20 Apr, 2025 07:01 PM

 

Published : 20 Apr 2025 07:01 PM
Last Updated : 20 Apr 2025 07:01 PM

’மண்டாடி’ கதையின் நாயகனாக சூரி தேவைப்பட்டது ஏன்? – இயக்குநர் விளக்கம்

’மண்டாடி’ கதையின் நாயகனாக சூரி தேவைப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை இயக்குநர் மதிமாறன் தெரிவித்துள்ளார்.

’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ‘மண்டாடி’ குறித்து இயக்குநர் மதிமாறன் பேசும் போது, “சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது.

சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்துக்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி சார் போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.” என்று பேசினார் மதிமாறன்.

இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் விரைவில் துவங்குகிறது. காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் உறவுகளின் பின்னணியுடன் விளையாட்டு உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான பயணமாக, இது உருவாகிறது. இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘மண்டாடி’ குழுவினரால் தயாரிக்கப்பட்ட படகுப் பந்தய உலகம் குறித்த ஒரு ஆவண வீடியோ வெளியிடப்பட்டது. அதில் படத்தின் வித்தியாசமான பின்னணியைக் காட்டியது.

மேலும், ’மண்டாடி’ பெயருக்கான அர்த்தம் குறித்து படக்குழுவினர், “காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்.

மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல, பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.” என்று தெரிவித்துள்ளது.

எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சூரி, சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x