Published : 19 Apr 2025 10:41 AM
Last Updated : 19 Apr 2025 10:41 AM
சென்னை: ஜோதிகா இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என்று ‘ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஏப். 19) சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா பேசியதாவது: “ரெட்ரோ என்பது நாம் கடந்து வந்த காலத்தை குறிக்கும் சொல். நான் கடந்து வந்த இந்த 25,30 ஆண்டுகளை என்னால் மறக்கவே முடியாது. கார்த்திக் சுப்பராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்போது ஒவ்வொரு நாளையும் நான் ரசித்து அனுபவித்தேன். சில நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை நேரில் சந்தித்தேன்.அவர்களில் பலருக்கும் 20 வயதுதான் இருக்கும். என் மீது மிகுந்த அக்கறையுடன் அவர்கள் என்னை நலம் விசாரித்தனர். இந்த அன்பு தான் என்னை இப்போது வரை இயங்க வைக்கிறது. இந்த அன்பு இருந்தால் போதும் நான் எப்போதும் நன்றாக இருப்பேன்.
10ஆம் வகுப்பில் எல்லா தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். பொதுத் தேர்வில் பாஸ் ஆகிவிட்டேன். அதே போல +2விலும் எல்லா தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். பொதுத் தேர்வில் பாஸ் ஆகிவிட்டேன். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கை மிகவும் அழகானது. வாய்ப்பு வரும்போது அதை விட்டுவிடாதீர்கள். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு எனக்கு நானே தேடிக் கொண்ட பதில்தான் அகரம் ஃபவுண்டேஷன். நீங்கள் எனக்கு சக்தியினால்தான் அதனை அனைவரிடமும் என்னால் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. அதன் மூலம் சுமார் 8 ஆயிரம் தம்பி தங்கைகள் பட்டதாரிகள் ஆக முடிந்தது.
அதே போல என்னுடைய கண்ணாடிப்பூவுக்கும் நன்றி. அவர் இல்லையென்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. ஜோதிகாவுக்கு நன்றி” இவ்வாறு சூர்யா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT