Published : 17 Apr 2025 07:28 AM
Last Updated : 17 Apr 2025 07:28 AM
ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது குழுவுடன் செய்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து...
“அதுக்குள்ள 10 வருஷமாச்சுங்கறது ஆச்சரியமாகத்தான் இருக்கு. 2015-ம் வருஷம் சினிமாவுல அறிமுகமானேன். அப்புறம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்னு சினிமாவுல ஒரு முழு வட்டமா வந்திருக்கிறதுல மகிழ்ச்சி. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதுக்கு ரசிகர்களுக்கு நன்றி” மகிழ்ச்சியாக ஆரம்பிக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.
வேர்ல்டு டூர் இசை நிகழ்ச்சி எப்படி போயிட்டிருக்கு?
எல்லா பக்கமும் சிறப்பான வரவேற்பு கிடைச்சிருக்கு. போன வருஷம் ஆரம்பிச்சோம். தமிழர்கள் இருக்கிற பெரும்பாலான நாடுகள்ல இந்த நிகழ்ச்சியை நடத்துறோம். இதுவரை 8 நாடுகள்ல முடிச்சுட்டோம். அடுத்து 6 நாடுகளுக்குப் போகப் போறோம். இந்த வருஷ கடைசியில சென்னையில நடக்கிற நிகழ்ச்சியோட அது முடிவடையும். 3 மணிநேரம் மேடையிலயே இருந்து நிகழ்ச்சி பண்ணணும். சுமார் 20-ல இருந்து 25 கி.மீட்டருக்கு அங்கயும் இங்கயுமா நடப்போம். அதாவது எங்க 'ஸ்டெப்ஸ்' மட்டும் அவ்வளவு வரும். இதுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொஞ்சம் இடைவெளித் தேவைப்படுது. அதனால நடிகனா என்னால இப்ப படம் பண்ண முடியலன்னாலும் இசை அமைப்பாளரா பண்ணிட்டு இருக்கேன். இப்ப ‘மூக்குத்தி அம்மன் 2’ பண்றேன். இன்னொரு படம் கூட ஒப்பந்தமாகி இருக்கு. அதுபற்றி அடுத்த மாசம் அறிவிப்பு வெளியாகும்.
நடிகரா அடுத்து என்ன பண்றீங்க?
‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் படத்துல நடிக்க இருக்கிறேன். அது பற்றிய அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும். ‘வேர்ல்டு டூரு’க்கு இடையில இந்தப் படத்தோட ஷூட்டிங்கை ஆரம்பிச்சு அடுத்த வருஷம் வெளியிடலாம்னு திட்டம். திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்து சில விஷயங்களை பண்ணிட்டு இருக்கோம். அந்த வகையில, ஹிப் ஹாப் தமிழா ரசிகர்கள் மன்றத்தை, ‘ஹிப் ஹாப் தமிழா அறக்கட்டளை’யா மாற்றி அதை ஓர் அமைப்பா இந்த வருஷம் அமைக்கிறோம். அதன் மூலமா பொருளாதார ரீதியா பின் தங்கி இருக்கிற மாணவர்களை தேர்வு பண்ணி, அவங்க படிக்கறதுக்கு இந்த வருஷத்துல இருந்து உதவி பண்ண இருக்கிறோம்.
ஏற்கெனவே தமிழ் எழுத்துகளின் வரலாறை ‘தமிழி’ ங்கற பெயர்ல ஆவணப்படமா உருவாக்கி இருந்தீங்களே?
ஆமா. அதுக்கு தமிழர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சது. அதை பல்வேறு கல்லூரிகள்ல திரையிட்டோம். அமெரிக்கா வரை கொண்டு போனோம். அதுக்கு அடுத்தபடியா 2021-ம் வருஷம், தமிழக அரசு சார்பா, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகள்ல அகழாய்வு பணிகளை ஆரம்பிச்சதும் அவங்க அனுமதியோட, அதை ஆவணப்படுத்த முடிவு பண்ணினோம். அப்ப அதுல என்ன கிடைக்கும் அப்படிங்கறது எங்களுக்குத் தெரியாது. ஆனா இரும்பு நாகரிகம் தொடங்கியதே பொருநை நதிக்கரையிலதான், அப்படிங்கற புது வரலாறு, அறிவியல் பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்கு. அதை கடந்த 2 மாசத்துக்கு முன்னால நம்ம முதல்வர் ஸ்டாலின் அறிவிச்சார். இது உலக அரங்குல முக்கியமான விஷயம். தமிழனா நமக்கு ரொம்ப பெருமையானது. இந்த முக்கியமான தொல்லியல் ஆராய்ச்சியை, எங்க குழு 4 வருஷமா ஆவணப்படமா எடுத்திருக்கு. இந்தியாவுல தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்வை, முழுவதுமா ஆவணப் படுத்துறது இதுதான் முதன்முறை.
இதை எங்க திரையிடப் போறீங்க?
நான்கு வருஷம் பண்ணின ஆய்வுகளை மூன்றரை மணி நேர படமா கட் பண்ணியிருக்கோம். அதுல இருந்து முக்கியமான சிலவற்றை மட்டும் எடிட் பண்ணி, ஒன்றரை மணி நேர படமா பண் றோம். இன்னும் 2 மாசத்துல ரெடியாகிடும். தமிழ்ல உருவாகி இருக்கிற இந்தப்படத்தை ஆங்கில சப் டைட்டிலோட பல்வேறு உலகத் திரைப்பட விழாக்கள்ல திரையிட முடிவு பண்ணியிருக்கோம். பிறகு உலக தமிழர்கள்கிட்டயும் அதை கொண்டு செல்ல ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT