Last Updated : 11 Apr, 2025 07:20 PM

 

Published : 11 Apr 2025 07:20 PM
Last Updated : 11 Apr 2025 07:20 PM

‘குட் பேட் அக்லி’ முதல் நாள் வசூல் வேட்டை - தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, உலக அளவிலான முதல் நாள் வசூல் ரூ.50 கோடியை கடந்துவிட்டதாக தெரிகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் நேற்று (ஏப்.10) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அஜித் படங்களின் முதல் நாள் வசூலிலேயே இதுதான் டாப் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து இந்திய அளவில் மதிப்பிட்டால் ரூ.35 கோடி அளவிலும், வெளிநாடுகளில் ரூ.17 கோடி அளவிலும் வசூல் இருப்பதால், முதல் நாளின் ‘குட் பேட் அக்லி’யின் ஒட்டுமொத்த வசூல் ரூ.50 கோடியை கடந்துவிட்டதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

‘மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா அம்சங்களுடன் அவரது பல படங்களின் ரெஃபரன்ஸ்களை உள்ளடக்கியதாக உள்ளது. படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகம் ததும்பும் அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது. அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டதா தோன்றும் இப்படத்தின் விமர்சனத்தை வாசிக்க > குட் பேட் அக்லி - விமர்சனம்: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!

இதனிடையே, 'குட் பேட் அக்லி’ தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகிய இயக்குநர்களுடன் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இப்படியான சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் மீண்டும் அஜித் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x