Published : 10 Apr 2025 03:37 PM
Last Updated : 10 Apr 2025 03:37 PM
’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம்.
ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்), தனது மனைவியின் (த்ரிஷா) பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் விட்டு சரண்டர் ஆகிறார். புதிதாக பிறந்த தன் குழந்தையிடமும் அவனது 18-வது பிறந்தநாளன்று உன் பக்கத்தில் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். 17 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் அவர், தனது மகனின் பிறந்தநாள் நெருங்கும் வேளையில் சிறையிலிருந்து தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வருகிறார். ஆனால், அவர் வெளியே வரும் சமயத்தில் ஸ்பெயின் நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது மகன் பொய் வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார்.
குடும்பத்தோடு மீண்டும் சேரும் கனவோடு வரும் ஏகேவிடம், இந்த பிரச்சினைகளை மீண்டும் சரிசெய்யுமாறு அவரது மனைவி சொல்கிறார். தன் மகனை சிக்க வைத்தது யார் என்று கண்டுபிடித்தாரா? அடுத்து என்ன நடந்தது என்பதுதான் ‘குட் பேட் அக்லி’ படத்தின் திரைக்கதை.
சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நாஸ்டால்ஜியா என்ற பெயரில் அவர்கள் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வசனங்கள் அல்லது பாடல்களாக வைப்பதுதான் ட்ரெண்ட் ஆக உள்ளது. ஆனால், இதுவரை அப்படி வந்த படங்களுக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. அந்த படங்களில் காட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்தப் படத்தில் ரெஃபரன்ஸ்களுக்கு நடுவே தான் படம் கொஞ்சம் வருகிறது. அந்த அளவுக்கு அஜித்தின் ஆரம்பகால படங்கள் தொடங்கி சமீபத்திய படங்கள் வரை ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸோ ரெஃபரன்ஸ். ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு வசனத்துக்கு அஜித்தின் முந்தைய படங்களின் ஒரு குறியீடாவது வசனங்களாகவோ அல்லது பாடல்களாகவோ வந்துவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில் அவை குதூகலத்தை தந்தாலும் போகப் போக அதுவே ஓவர்டோஸ் ஆகி போதும் என்று தோன்றவைத்து விடுகிறது.
ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி அதில் ஒரு முக்கியமான கட்டத்தில் பார்ப்பவர்களை ‘கூஸ்பம்ப்ஸ்’ ஆக்கும் வகையில் ரெஃபரன்ஸ் வைத்தால் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், வெறுமனே முதல் மூன்று நாட்கள் வரும் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் நோக்கில் காட்சிக்கு காட்சிக்கு ரெஃபரன்ஸ்களை நிரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக்.
சரி, எழுதிய திரைக்கதையை குறைந்தபட்சம் கோர்வையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால், காட்சிகள் இஷ்டத்துக்கு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஹீரோ நினைத்தால் ஜெயிலில் மகனுடன் வீடியோ கால் பேசுகிறார். நினைத்தபோது மூன்று மாதத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிறார். இந்தக் காட்சிக்கு நியாயம் செய்கிறேன் பேர்வழி என போலீஸ்காரரான சாயாஜி ஷிண்டேவுக்கும் அஜித்துக்கும் 17 வருட பழக்கம் என்று ரெடின் கிங்ஸ்லியை வைத்து ஒரு வசனம் வேறு. எந்தக் காட்சியிலும் மருந்துக்கும் ‘டீடெட்டெயிலிங்’ என்ற ஒன்று இல்லவே இல்லை.
இது ஒரு ஸ்பூஃப் படமா? அல்லது முந்தைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்களுக்கான கோர்வையா என்ற குழப்பம் கடைசி வரைக்குமே நீடிக்கிறது. படத்தில் நினைவில் இருக்கும் காட்சிகள் என்று சொன்னால் ‘இளமை இதோ இதோ’ பாடல் பின்னணியில் ஒலிக்க நடக்கும் பார் சண்டை. இடைவேளை காட்சி (அதிலும் ஒரு படத்தின் ரெஃபரன்ஸ்) என ஒரு சில காட்சிகளை மட்டுமே சொல்ல முடியும். என்னதான் படம் போரடிக்காமல் காட்சிகள் சென்றாலும், படம் முடிந்த பிறகு யோசித்தால் அஜித்தின் பழைய படங்களின் குறியீடுகள் மட்டுமே நினைவில் தேங்கியிருக்கின்றன.
படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகம் ததும்பும் அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது. நெகட்டிவ் தன்மை பொருந்திய ஹீரோ கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது போல பிரித்து மேய்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் சிகரெட், குடி என்று வந்தாலும், அஜித் எந்த காட்சியிலும் மது, சிகரெட் பயன்படுத்துவது போல நடிக்காதது பாராட்டத்தக்கது.
அஜித்தை தவிர படத்தின் மற்ற எந்த கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்படவில்லை. த்ரிஷா, பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷ்ரோஃப் மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ உள்ளிட்ட அனைவரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.
படத்தின் பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷின் பணி பாராட்டுக்குரியது. பாடல்களின் ‘காட் ப்ளஸ் யூ’ பாடல் மட்டுமே ஓகே ரகம். மற்றவை நினைவில் இல்லை. அபிநந்தன் ராமானுஜத்தின் ரெட்ரோ ஸ்டைல் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கு வலு சேர்த்துள்ளது. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் ஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பில்லாததைப் போல இருப்பது உறுத்தல்.
என்னதான் படத்தின் நாஸ்டால்ஜியாவை தூண்டும் ரெஃபரன்ஸ், ஸ்லோமோஷன் ஷாட்ஸ் என இருந்தாலும் அடிப்படையாக ஒரு வலுவான கதை, திரைக்கதை அவசியம். ஆனால் அவை இப்படத்தில் முற்றிலுமாக மிஸ்ஸிங். இப்படத்தில் வரும் ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘வரலாறு’, ‘பில்லா’ போன்ற படங்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் குறியீடுகளாக வைப்பதற்கு அவற்றில் இருந்த நல்ல திரைக்கதையே காரணம். ஆனால் வெறுமே ‘ஃபேன் சர்வீஸ்’ என்ற பெயரில் எடுக்கப்படும் இது போன்ற படங்களை எத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருக்க முடியும் என்பது இயக்குநர்களுக்கே வெளிச்சம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT