Published : 10 Apr 2025 06:28 AM
Last Updated : 10 Apr 2025 06:28 AM
தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. சிவபிரகாஷ் இயக்கியுள்ள இதில் அவர் ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். முருகேஷ் பாபு வசனம் எழுதியுள்ளார். இ5 என்டர்டெயின்மென்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில், இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி உதயகுமார், வசந்தபாலன், கரு.பழனியப்பன், ஆர்.கண்ணன், சுசீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், சினேகன், சித்ரா லட்சுமணன், தேவயானி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். அவரது முதல் படம் போலவே இது இல்லை. சாதி என்கிற கொடிய நோயை ஒழிக்காமல் சமநிலை சமூகம் பிறக்காது. எத்தனையோ மகான்கள் வந்து கூறியும் இன்னும் இந்த சாதி ஒழியவில்லை. இன்னொரு தலைமுறை வந்து இந்த சாதியை காலில் போடும் செருப்பாகப் போட்டுத் தேய்த்தால் மட்டுமே சாதி மறையும். இந்த சாதிய கொடுமையை, வலியை மிகைப்படுத்தாமல் இரண்டு மணி நேரம் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
முதல் படத்திலேயே இயக்குநர் சிவபிரகாஷுக்கு இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இசைஞானி என்கிற வார்த்தை கூட குறைவுதான். இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். எது கேட்டாலும் அருள் வார். உலகில் எத்தனையோ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு இணை இல்லை. இயக்குநர் ஒரு திரைக்கதை எழுதினால் இளையராஜா தனது இசையால் இன்னொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார். நம் தாய் பாடிய தாலாட்டு யாருக்கு ஞாபகம் இருக்கிறது? இன்று 40 வருடங்களாக அவர் பாடல்களைத் தான் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை. அவர் இசையைக் கேட்டால் சோறு தண்ணி எதுவுமே தேவையில்லை. அவர் விஜித் படத்துக்கும் இசையமைப்பார். விஜித்தின் பையன் வந்து இயக்கப் போகும் படத்துக்கும் இசையமைப்பார்.
எப்படி இலக்கிய உலகில் பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா. அவர் ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற படம் இது. விஜித், ‘பாலைவனச் சோலை’ படத்தில் சந்திரசேகர் வெளிப்படுத்தியது போன்று அற்புதமான உடல் மொழி, நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT