Published : 06 Apr 2025 07:22 AM
Last Updated : 06 Apr 2025 07:22 AM
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெப்சி’க்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெப்சி அமைப்பு, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ‘பெப்சி’ க்கு எதிராக புதிய திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி என் ராமசாமி, பொதுச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. எங்கள் சங்கமும் பெப்சி அமைப்பும் சுமார் 50 வருடங்களாகத் தொழில் ஒத்துழைப்பில் ஈடுபட்டு வந்தோம். சில காரணங்களால் அவர்கள் எங்கள் சங்கத்துக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறி நடப்புத் தயாரிப்பு சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் அதற்கு உடன்படவில்லை.
இதனால் புதிய தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் சூழலுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி எங்களைத் தள்ளியுள்ளார். அதனால் ‘தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு’ என்ற புதிய அமைப்பை உருவாக்க இந்த செயற்குழுவில் முடிவு எடுத்துள்ளோம். மேலும், சினிமா துறையில் அனைவரும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களாகத் தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பி.எப் உள்ளிட்ட வசதிகளைப் பெறுவதற்காக, ‘பெஸ்ரா’ என்ற இன்னொரு அமைப்பைத் தொடங்குகிறது, பெப்சி. தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களுக்கு அவ்வளவு செய்தும் இப்படி ஒரு அமைப்பை அவர்கள் தொடங்குவதை நாங்கள் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பணிபுரிய மாட்டோம்: ஆர்.கே.செல்வமணி - தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவு குறித்து ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும் என்று எப்போதும் சொல்லி வருகிறோம். நடப்பு தயாரிப் பாளர்கள் சங்கம் தொடங்கிய பிறகு அவர்களுடன் பணிபுரிய வேண்டாம் என்று எங்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து அழுத்தம் கொடுத்தார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அங்கிருந்துதான் பிரச்சினை தொடங்கியது. இப்போது, ‘பெப்சி’க்கு எதிரான அமைப்பை தொடங்கியுள்ள அவர்களுடன் பணிபுரிய மாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT