Published : 27 Mar 2025 10:56 AM
Last Updated : 27 Mar 2025 10:56 AM
மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நடிகரும் இயக்குநருமான மனோஜின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48), பாரதிராஜா இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்கம் குறித்து படித்துவிட்டு, இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 1999-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ், தொடர்ந்து, கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி என பல படங்களில் நடித்தார். இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
இயக்குநர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பாரதிராஜா இயக்கிய ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்து இயக்க திட்டமிட்டிருந்தார். அந்தப் படம் வெறும் அறிவிப்போடு கைவிடப்பட்டது. பின்னர் கடந்த 2023-ம் ஆண்டு ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தை, இயக்கினார். இதில் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
‘சாதுரியன்’ என்ற படத்தில் நடிக்கும் போது, அதில் நாயகியாக நடித்த நந்தனாவை காதலித்து 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதிவதனி, அர்த்திகா என்ற 2 மகள்கள் உள்ளன.
இதய அறுவைச் சிகிச்சை: தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்த மனோஜுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை செய்தபோது உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சென்னை சேத்துபட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
முதல்வர் ஆறுதல்: ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் உடலை கண்ட பாரதிராஜா கதறி அழுதார். பின்னர் அங்கிருந்து பாரதிராஜா வீடு இருக்கும் நீலாங்கரைக்கு மனோஜின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாரதிராஜாவுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.
பிரபலங்கள் அஞ்சலி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கே.பாக்யராஜ், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, பிரபு, சரத்குமார், ராதிகா, தயாரிப்பாளர் தாணு, கவுண்டமணி, சூரி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நேற்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மனோஜின் மகள்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர். பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT