Published : 23 Mar 2025 09:36 AM
Last Updated : 23 Mar 2025 09:36 AM
நட்டி நடித்த ‘எங்கிட்ட மோதாதே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ராமு செல்லப்பா, அடுத்து ‘ஓம் காளி ஜெய் காளி' என்ற வெப் தொடரை இயக்கி இருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டாரில் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கும் இதில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த வெப் தொடர் பற்றி பேசினார், இயக்குநர் ராமு செல்லப்பா.
‘ஓம் காளி ஜெய் காளி' ஆன்மிக கதை மாதிரி தெரியுதே?
இல்லை. தலைப்பு அப்படி வச்சிருக்கோம். திருநெல்வேலி பகுதியில குலசை தசராவுக்கு மாலை போட்டு 50 நாள், 30 நாள்னு விரதம் இருந்து குழு குழுவா போகிற பழக்கம் இருக்கு. அப்படிப் போகிற ஒரு குழுவைச் சேர்ந்தவர் விமல். யாரோ ஒருத்தரோட ஒரு பிரச்சினை, அவருக்கும் அவர் குழுவுக்கும் என்ன மாதிரியான சிக்கலைக் கொண்டு வருது, அதை எப்படி தீர்க்கிறாங்கன்னு கதை போகும். தசரா பின்னணியில உருவான கதைங்கறதால இந்த தலைப்பை வச்சோம்.
‘விலங்கு’ வெப் சீரிஸ் ஹிட்டானதால விமலை தேர்வு பண்ணுனீங்களா?
இல்லை. ஒரு படம்னா, 40, 50 நாள்ல ஷுட் பண்ணி முடிச்சிருவோம். வெப் சீரிஸ் அப்படியில்லை. 120 நாள் வேணும், தோற்றத்தை மாற்றணும்னு நிறைய விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுக்கிட்டு நடிக்க வர்றவங்க வேணும். அதுமட்டுமில்லாம படப்பிடிப்புக்கு ஒரு வருஷம் கூட ஆகும். அதுக்கு விமல் தயாரா இருந்தார். அதோட மட்டுமில்லாம வித்தியாசமான கதாபாத்திரத்துல நடிக்கணும்னு ஆர்வமா இருந்தார். இந்தக் கதையை கேட்டதும் உடனே நடிக்கிறேன்னு சொன்னார். அப்படித்தான் அவர் இந்த வெப் சீரிஸுக்குள்ள வந்தார்.
திருநெல்வேலியில நடக்கிற கதையா?
ஆமா. அங்க வனதேசம் அப்படிங்கற ஒரு கற்பனையான கிராமத்துல நடக்கிற கதைதான் படம். விமல், குத்துவிளக்கு பட்டறையில வேலை பார்க்கிறவரா வர்றார். நாயகி பவானி, மைக்செட் நடத்துறவர். இவங்களுக்குள்ள ஒரு காதல் டிராக்போகும். கிராமத்து நம்பிக்கைகள், புராண விஷயங்களும் கதையில இருக்கும். பழிவாங்குறதும் இருக்கும். ஹீரோவுக்கான கதை திருநெல்வேலியா இருந்தாலும் வில்லனுக்கான ஏரியா நாகர்கோவில். இந்த ரெண்டு மாவட்ட, வட்டார வழக்கையும் ரொம்ப சரியா பயன்படுத்தி இருக்கோம்னு நம்பறேன்.
இந்தி நடிகை சீமா பிஸ்வாஸ் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்களாமே?
இந்தியா முழுவதும் தெரிஞ்ச சிறந்த நடிகை அவங்க. ‘பண்டிட் குயின்’ படத்தை மறக்க முடியுமா? தமிழ்ல ‘இயற்கை’ உட்பட சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. வெப் சீரிஸ்னா மற்ற மொழி நடிகர்களையும் நடிக்க வைக்க வேண்டியிருக்கு. இந்த கதையில வர்ற ஒரு கேரக்டருக்கு, எதிர்பார்த்த மாதிரி அவங்க பொருத்தமா இருந்தாங்க. அதனால அவங்களை நடிக்க வச்சோம். கதையில வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டுற கேரக்டர். பாசிடிவ், நெகடிவ்னு அவங்களுக்கு ரெண்டு லேயர் இருக்கும்.
தொடர்ல நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்களே..?
பவானி நாயகியா நடிச்சிருக்காங்க. மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி, கோவிந்த் பத்மசூர்யா, புகழ், கஞ்சா கருப்பு, பவன், திவ்யா துரைசாமி, குமரவேல், ஜி.எம்.குமார், வீஜே மகேஷ்வரின்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. எல்லோருக்குமே கதையில முக்கியத்துவம் இருக்கும்.
‘எங்கிட்ட மோதாதே’ படத்துக்கு பிறகு அடுத்த படைப்புக்கு ஏன் தாமதம்?
தாமதம்னு சொல்ல முடியாது. நான் பிசியாதான் இருந்தேன். கரோனா வந்தது. பிறகு ‘விலங்கு’ வெப் சீரிஸ்ல வேலை பார்த்தேன். ‘டாணாக்காரன்’ படத்துல வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு, இந்த வெப் சீரிஸை இயக்கி இருக்கேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT