Published : 11 Mar 2025 06:32 PM
Last Updated : 11 Mar 2025 06:32 PM

முல்லைவனம்: ஸ்ரீராம் - குமாரி ருக்மணி ஜோடியின் கெமிஸ்ட்ரி | அரி(றி)ய சினிமா

ஆரம்ப கால தமிழ் சினிமாவின் அழகான, கவர்ச்சியான கதாநாயகர்களில் ஒருவர், ஸ்ரீராம். திரைத் துறைக்காக மதுரையில் இருந்து சென்னை வந்த அவர், ஜெமினியின் ‘சந்திரலேகா’ படத்தில் குதிரை வீரனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் கூட அவர் பெயர் இடம்பெறவில்லை. தொடர்ந்து துணை நடிகராக நடித்து வந்த அவரது முழுப் பெயர், மதுரை ஸ்ரீராமுலு நாயுடு. கோவை பக்‌ஷிராஜா ஸ்டூடியோ உரிமையாளரின் பெயரும் அதுவாகவே இருந்ததால் தனது பெயரை 'ஸ்ரீராம்' என்று மாற்றிக்கொண்டார்.

பின்னர், இயக்குநர் கே.வேம்புவின் பழக்கம் கிடைத்ததால், அவர் எழுதி, இயக்கிய ‘மதனமாலா’ (1948) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் ஸ்ரீராம். அதாவது ராஜகுமாரனாக நடித்தார். இந்த கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. பின்னர் நவஜீவனம் (1949), சம்சாரம் (1951), மூன்று பிள்ளைகள் (1952) போன்ற படங்களில் நடித்த அவர், எம்.ஜி.ஆரின் ‘மலைக்கள்ளன்’ (1954) படத்தில் வில்லனாகவும் சிவாஜியின் ‘பழனி’ (1965) படத்தில் சகோதரர்களில் ஒருவராகவும் நடித்தார்.

குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர், 1956-ல் ‘மர்ம வீரன்’ என்ற படத்தை கதாநாயகனாக நடித்துத் தயாரித்தார். இதில் வைஜயந்திமாலா, டி.எஸ்.பாலையா, தங்கவேலு, சந்திரபாபு என பலர் நடித்தனர். பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், சரியாக ஓடாததால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார், ஸ்ரீராம்.

அவர், கதாநாயகனாக நடித்த படங்களில் ஒன்று, ‘முல்லைவனம்’. குமாரி ருக்மணி நாயகியாக நடித்தார். இவர், நடிகை லட்சுமியின் தாய். பி.எஸ்.வீரப்பா, பி.எஸ்.ஞானம், ஏ. கருணாநிதி, எஸ்.ஏ.நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்தனர். அரவிந்த் பிக்சர்ஸ் சார்பில் வி.கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தின் கதையை கே.ராமச்சந்திரன் எழுதினார். ஏ.கே.வேலன் வசனம் எழுதினார்.

கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்ட இப்படத்துக்கு. கே.வி.மகாதேவன் இசையமைத்தார். பாடல்களை கு.சா.கிருஷ்ண மூர்த்தி, தஞ்சை ராமையா தாஸ், கா.மு.ஷெரிப் எழுதினர்.

ஒரு தபால் வேனில் செல்லும் பவானி என்ற பெண்ணிடம் இன்னொரு பெண், ஒரு காதல் கதையைக் கூறுகிறார். காதலில் விழுந்த இளம் பெண்ணை, வேறு ஒருவருடன் கட்டாய திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர், உறவினர்கள். திருமணத்தன்று தாலி காணாமல் போவதால் திருமணம் நிறுத்தப்படுகிறது. பிறகு நாயகி எப்படி நாயகனுடன் சேர்கிறார் என்பது படம். உண்மையான காதல் எப்படியும் வெல்லும் என்பது கதை.

இந்தப் படத்தில் ஸ்ரீராம் - குமாரி ருக்மணி ஜோடியின் கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. 1955-ம் ஆண்டு பிப்.11-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு இப்போது 70 வயது. சிறந்த நடிப்பு, இனிமையான இசை, நடனம் என இருந்தபோதும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

> முந்தைய பகுதி: மக்களைப் பெற்ற மகராசி: கொங்கு தமிழ் பேசிய சிவாஜி | அரி(றி)ய சினிமா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x