Published : 10 Mar 2025 08:34 AM
Last Updated : 10 Mar 2025 08:34 AM
தமிழ்நாட்டில் தனி திரையரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைய தொடங்கியுள்ளன. ஓடிடி தளங்களின் வருகை காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பது குறைந்துவிட்டது. பார்வையாளர்கள் வராததால் புதிய படங்கள் என்றாலும் பல காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலை தியேட்டர்காரர்களுக்கு தற்போது ஏற்பட்டு வருகிறது. இல்லையென்றால் குறைவான பார்வையாளர்களுடன் திரையரங்குகளை நடத்த வேண்டி இருக்கிறது.
இது தவிர டிக்கெட் கட்டணத்தில் மாநில அரசால் விதிக்கப்படும் கேளிக்கை வரி, மத்திய அரசின் ஜிஎஸ்டி, மாநில அரசின் ஜிஎஸ்டி என சேர்த்து வசூலிக்கப்படுகிறது. மாநில அரசுக்கான இரட்டை வரியைக் குறைக்கப் பலமுறை கோரிக்கை வைத்தும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன என்கிறார்கள். முதலில் சென்னையில் தனித்திரையரங்குகள் மூடப்பட்டு வந்த நிலையில், இப்போது மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் சிறுநகரங்களிலும் மூடப்பட்டு வருகின்றன.
2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 721 தனித் திரையரங்குகள் இருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2021-ல் 636- ஆக குறைந்தது. டிசம்பர் 2024-ல் இந்த எண்ணிக்கை 572- ஆகக் குறைந்துள்ளது. அடுத்து வரும் காலங்களில் இன்னும் பல திரையரங்குகள் மூடப்படலாம் என்கிறார்கள். தனித் திரையரங்குகள் ஒரு பக்கம் மூடப்பட்டு வந்தாலும் ‘மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன்ஸ்’ எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 2018-ம் ஆண்டு 423 என்ற எண்ணிக்கையில் இருந்த மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன்ஸ், 2024-ம் ஆண்டில் 610-ஆக உயர்ந்துள்ளது. இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கலாம் என்கிறார்கள்.
நாமும் மாற வேண்டும்: இதுபற்றி, பிரபல திரைப்பட விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான திருப்பூர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “மக்கள் மன நிலைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டிய நிலை வந்து விட்டது. அவர்களின் தேவை யறிந்து திரையரங்குகளும் அப்டேட்டுக்கு வரவேண்டும். அப்படித்தான் பல தனி திரையரங்குகள் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளாக மாறிவிட்டன. அப்படி மாறாத தனித் திரையரங்குகள் மட்டுமே மூடப்படுகின்றன. இதற்கும் அரசு விதிக்கும் வரிகளுக்கும் தொடர்பில்லை. மல்டிபிளக்ஸுக்கு அதே வரிதான் விதிக்கப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT