Published : 10 Mar 2025 05:35 AM
Last Updated : 10 Mar 2025 05:35 AM
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் நேற்று அரங்கேற்றம் செய்தார். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இளையராஜா, தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிம்பொனி இசை அமைக்க வேண்டும் என்பது அவரது நீண்டகால கனவாக இருந்தது. ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகளை ஒன்றிணைத்து உணர்ச்சி ததும்ப தரும் இசைதான் சிம்பொனி. அதன் தொடக்கமாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்பத்தை அவர் உருவாக்கினார்.
இந்நிலையில், ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறிவித்தார். லண்டனில் மார்ச் 8-ம் தேதி அரங்கேற்றம் செய்ய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லண்டன் சென்ற இளையராஜா, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்றினார்.
அவரது இசைக் குறிப்புகளை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளில்ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை இளையராஜா படைத்துள்ளார். இசை ஜாம்பவான்கள் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக் கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு சிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT