Published : 09 Mar 2025 12:41 PM
Last Updated : 09 Mar 2025 12:41 PM
அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் ரிஷி (ரிச்சி), மெல்வின் (தேவராஜ்), அங்கிதா (சுகன்யா), ஜெனிபர் (அரியா) ஆகிய யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காந்தா (யுவிகா) என்ற மலைக்கிராமத்துப் பெண் வழிகாட்டிபோல் செல்கிறாள்.
காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா என்பது கதை.
சக்தி வழிபாட்டின் அங்கமாக இருக்கும் ‘சப்த கன்னியர்’ வழிப்பாட்டை பேய்க் கதையுடன் இணைக்க முயல்கிறது திரைக்கதை. மங்கை என்கிற சூனியக்காரி யார்? அவளை காத்தூர் என்ற மலைக்கிராம மக்கள் ஒன்றுகூடி ஏன் கொலை செய்தார்கள், உண்மையில் அவளுடைய ஆவி, அந்த கிராம மக்களின் சப்த கன்னியர் வழிபாட்டை தடுக்கிறதா என்பது உள்ளிட்ட முன் கதை, சுவாரஸ்யமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
வனப்பகுதியை மையமாகக் கொள்ளும் பேய்ப் படங்கள் பொதுவாக ஹாரர் த்ரில்லர் சினிமாக்களாக இருக்கும். அதிலிருந்து மாறுபட்டு, கிராம மக்களின் நம்பிக்கை உண்மையா, பொய்யா என்பதைத் தங்களுடைய பார்வையாளர்களுக்குக் காட்டுவதை நோக்கமாகக் கொண்ட யூடியூபர்கள், தாங்கள் கொண்டுசெல்லும் 2 கேமராக்களில் பதிவு செய்த காட்சிகளின் தொகுப்பாகச் சித்தரிக்கும் வகையில் இப்படத்தின் கேமரா கோணங்களை அமைத்திருக்கிறார்கள்.
‘ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர்' என்கிற இந்த வகைக் காட்சிமொழிக்குச் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ். 4 கதாபாத்திரங்களைக் கொண்ட இப்படத்துக்கு, இவரும், ஒலி வடிவமைப்பு செய்துள்ள கேவ்யன் பிரெடெரிக்கும்தான் உண்மையான கதாநாயகர்கள். 3-வதாக ஃபவுண்ட் புட்டேஜிலிருந்து விரியும் காட்சிகள் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தியபடி இருக்க சரியான வெட்டுகளை கையாண்டிருக்கிறார், படத் தொகுப்பாளர் ரோஹித்.
யூடியூபர்களாக வரும் நால்வரும் தொடக்கத்தில் கெத்துக் காட்டினாலும் முழுநிலா இரவில் காட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்குள் சிக்கும்போது நடிப்பால் கதிகலங்க வைக்கிறார்கள். மெல்வின் - ஜெனிஃபர் இடையிலான காதல் இடரும் இடமும், ரிஷி - ஜெனிபர் இடையிலான தோழமை மலரும் இடமும் பயம், நம்பிக்கை இரண்டையும் ஒரு சேர உணர வைக்கிறது.
கதை, திரைக்கதை, உரையாடல், நடிப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்காமல், காட்சிமொழி, ஒப்பனை, ஒலி, ஒளி, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களைச் சற்று அதிகமாக நம்பிக் களமிறங்கியிருக்கும் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், தன் படக்குழுவிடம் நன்றாக வேலை வாங்கி பார்வையாளர்களுக்குத் தரமான முறையில் பயம் காட்டியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT