Published : 06 Mar 2025 10:46 PM
Last Updated : 06 Mar 2025 10:46 PM
சென்னை: ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா ஒரு மாதமாக குடும்பத்துடன் விரதம் இருக்கிறார் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இதற்கான பூஜை இன்று (மார்ச் 06) நடைபெற்றது. இதற்காக 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பொதுவாக தனது பட பூஜைகள், புரோமோஷன், ஆடியோ லான்ச் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டது கவனம் ஈர்த்தது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் இணைந்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியதாவது: “இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதன் பூஜையையே பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கிறோம். நிச்சயமாக படம் இதைவிட பெரியதாக இருக்கும். இதனை ரிலீஸை அதை விட பெரியதாக பான் இந்தியா அளவுக்கு முயற்சி செய்து வருகிறோம்.
முக்கியமாக நயன்தாரா குறித்து சொல்லியே ஆகவேண்டும். இந்த படத்தில் அம்மனாக நடிப்பதற்காக அவர் கிட்டத்தட்ட ஒரு மாதமாக விரதம் இருக்கிறார். இதன் முதல் பாகத்துக்கும் அப்படித்தான் விரதம் இருந்தார். அதே போல இந்த படத்துக்காகவும் இருக்கிறார். அவர் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தில், அவரது குழந்தைகள் உட்பட எல்லாரும் விரதம் இருக்கிறார்கள்” இவ்வாறு ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
நயன்தாரா பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸாண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT