Published : 05 Mar 2025 09:09 AM
Last Updated : 05 Mar 2025 09:09 AM
கார் ஒன்றில் செல்லும் ஒருவர், குப்பைத் தொட்டியில் இருந்து பளிச்சென ஏதோ மின்னுவதைப் பார்க்கிறார். சற்று உற்றுப் பார்த்தால் அதுவொரு அம்மிக்கல். பல வருடங்களாக அரைபட்டதில் தேய்ந்த அக்கல்லின் மீது சூரிய ஒளிபட்டதால் மின்னியிருக்கிறது என்பது அவருக்கு புலப்பட்டுவிட்டது. இப்போது அதை எடுக்க வேண்டும், டிரைவரிடம் சொன்னால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற யோசனை.
காத்திருக்கிறார். ஊரடங்குகிறது. மெதுவாக சென்று குப்பைத் தொட்டியிலிருந்த கல்லை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வீட்டுக்கு எடுத்து வந்துவிடுகிறார். அவரது கூற்றுப்படி, உலகில் வாழும் ஜீவராசிகளின் வாழ்வியலில் ‘வேஸ்ட்’ என்ற ஒன்றே கிடையாது. ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில்தான் ‘வேஸ்ட்’ என்பது நிரம்பிக் கிடக்கிறது.
சென்னையில் கிடைக்கும் குப்பைகளை மட்டும் தன்னால் 1 லட்சம் பேருக்கும் வீடு கட்டித் தர முடியும் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர். ஒரு மனிதரின் வாழ்க்கை என்பது அவரது வீட்டு வாசலுக்கு வெளியில் இருந்துதான் தொடங்குகிறது என்பது அவருடைய நம்பிக்கை. வெறுமனே பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், அவரது தெருவில் வசிப்பவர்கள் விழிப்பதற்கு முன்னதாக எழுந்து குப்பைகளில் இருந்து கிடைக்கும் உபயோகமான பொருட்களை சேகரிப்பார்.
அப்படி கிடைக்கும் பொருட்களை, செங்கல்பட்டு பக்கத்தில் இருக்கும் தனக்கு சொந்தமான இடத்தில் சேகரித்து வைத்துள்ளார். குப்பைகளில் இருந்து கிடைக்கும் பயனுள்ள பொருட்களை சேகரிப்பது துவங்கி அதற்காக வாங்கப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்வது வரை அனைத்தையும் அவரேதான் செய்வார். அவர்தான் திரை உலகின் பன்முக கலைஞன் நாசர்.
செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் கிராமம்தான் நாசரின் சொந்த ஊர். சினிமா ஆசையில் சென்னை வந்தவரை பசியும் பட்டினியும் சேர்ந்து துரத்த ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேருகிறார். அங்கிருந்தபடியே வார இதழ்களுக்கு கவிதை மற்றும் சிறுகதைகளை அனுப்பத் தொடங்குகிறார். சென்னை பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேர்ந்து சினிமாவுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்.
1985-ல் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ‘கல்யாண அகதிகள்’ திரைப்படம்தான் நாசரின் முதல் படம். ஒருமுறை எதிர்மறை கதாபாத்திரத்தில் வந்துவிட்டால்போதும் சினிமாவில் அந்தப் பாத்திரத்துக்கு இவர்தான் என முத்திரை குத்தப்பட்டுவிடும். நாசரும் அதற்கு விதிவிலக்கல்ல.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். அந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் தனது ‘நாயகன்’ திரைப்படத்தில் நாசருக்கு அந்தப் படத்தின் மிக முக்கிய கேரக்டரான அசிஸ்டென்ட் கமிஷ்னர் வேடத்தை கொடுக்கிறார். சின்ன வேடம்தான் என்றாலும் நேர்மையான போலீஸ் அதிகாரி என்பதோடு படத்தின் பிரதான பாத்திரமான வேலு நாயக்கரை கைது செய்யும் கதாப்பாத்திரம்.
மணிரத்னம், கமல்ஹாசன் என்ற ஆகச் சிறந்த படைப்பாளிகளை தன்னை உற்று நோக்க செய்ய நாசருக்கு அந்தப் படத்தில் வரும் ஒன்றிரெண்டு காட்சிகளே போதுமானதாக இருந்திருக்கிறது. அதன் விளைவு, அந்த இரு படைப்பாளிகளின் சிறந்த திரைப்படங்களில் நாசர் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார்.
1987-ல் இருந்து 1992 வரை பல்வேறு திரைப்படங்களில் நாசர் நடித்து புகழ்பெற்றிருந்தார். அதுவரை வெறுமனே உச்சரிக்கப்பட்ட நாசர் என்ற பெயர், 1992-க்குப் பிறகு உச்சரிப்பதற்கு முன் எச்சில் விழுங்க செய்திருக்கும். அந்த வருடத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ரோஜா’ திரைப்படத்தில் கர்னல் ராயப்பா, இயக்குநர் பரதனின் ‘தேவர் மகன்’ படத்தில் மாயன், ஆவாரம் பூ படத்தில் தேவர் என முப்பரிமாண அவதாரம் எடுத்திருப்பார்.
இந்த மூன்று கேரக்டர்களிலும் தனது உடல், மொழி, பாவம் என பிரித்து மேய்ந்திருப்பார் நாசர். அதுவும் ‘தேவர் மகன்’ படத்தில் வரும் அந்த பஞ்சாயத்து காட்சியில் சிவாஜி, கமல் என்ற இருபெரும் துருவங்களையும் மென்று செமித்திருப்பார் நாசர். ‘ஆவாரம்பூ’ படத்தில் நாசரின் மீசையும் மேனரிசமும் மிரட்டியிருக்கும். இதே வருடத்தில் இயக்குநர் செல்வாவின் முதல் படமான ‘தலைவாசல்’ படத்தில் பீடா சேட் கதாப்பாத்திரத்தில் வில்லனாக கதிகலங்க செய்திருப்பார் நாசர். வாய் முழுக்க பீடாவை குதப்பியபடி வசனம் பேசும் நாசரை மறப்பது கடினம்.
தொடர்ந்து மணிரத்னத்தின் பம்பாய், இருவர் உள்ளிட்ட படங்களிலும், கமலுடன் எண்ணற்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் தேவர் மகனுக்குப் பிறகு கமல் - நாசர் காம்போவின் மற்றொரு டாப் நாச் திரைப்படம் 'குருதிப்புனல்'. போராளிகள் குழுத் தலைவன் பத்ரியாக வரும் நாசர் தனது அசாத்தியமான நடிப்பால் அவருக்கு எதிராக நிற்கும் கமலையே காதல் கொள்ள செய்திருப்பார். கமல்தான் நாசரிடம் இருக்கும் அபரிமிதமான திறமைகளை வெளிக்கொணர்ந்தவர் என்றால் மிகையல்ல.
அதற்கு ஓர் உதாரணம். ஒருமுறை நாசரிடம் ஒரு கதையை சொல்கிறார். கதை நன்றாக இருப்பதாக நாசர் கூறியதும், அதில் லீட் ரோல் பண்ணப்போறது நாசர்தான் என்று கமல் கூற, அசந்து போயிருக்கிறார் நாசர். இப்படி நாசரின் நகைச்சுவை உணர்வை கணித்து கமல் வாய்ப்பளித்த அந்தப் படம்தான் ‘மகளிர் மட்டும்’. கமலும் நாசரும் திரையில் இணைந்து தோன்றினாலே ரசிகர்களுக்கு திருவிழாதான்.
நாசர் ஆகச் சிறந்த டப்பிங் கலைஞர். ‘இந்தியன்’ படத்தில் வரும் நெடுமுடி வேணு தொடங்கி ‘முபாசா கிங்’ படத்தில் கிரோஸ் வரை நாசர் டப்பிங்கிலும் உச்சம் தொட்டவர். நாடக கலை, கூத்து, நாட்டார் கலை வடிவங்கள், நாட்டுப்புறக் கலைகளின் அளவற்ற பற்று கொண்டவர். அத்தகைய கலைஞர்களின் வாழ்வுயர பெரிதும் விரும்புவர் நாசர்.
அந்த நல்லெண்ணம்தான் நடிகர்கள் பசுபதி, குமாரவேல், பாலசிங் உள்ளிட்ட கூத்துப்பட்டறை தயாரிப்புகளை வெள்ளித்திரைக்கு கைப்பிடித்து இழுத்து வந்த பெருமை அவரையே சேரும். நாசர் சிறந்த இயக்குநரும்கூட. ‘அவதாரம்’, ‘தேவதை’, ‘மாயன்’ போன்ற வித்தியாசமான கதைக்களங்களை இயக்கியவர் நாசர்.
‘மாயன்’ கதையை அந்த சமயத்தில் பிரபலமான நடிகர் ஒருவருக்குச் சொல்லி அட்வான்ஸ் தொகையும் கொடுத்திருக்கிறார். அந்த நடிகரும் அட்வான்ஸை பெற்றுக் கொண்டு ஒரு வார காலம் பயிற்சியும் எடுத்திருக்கிறார்.
பட அறிவிப்பு வெளியாகப் போகும் நேரத்தில், அந்த நடிகர் அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு நடிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். நான் ஒரு பிரபல நடிகர் இதுபோன்ற படங்களில் நடிக்க கூடாதென நண்பர்கள் கூறியதாக சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் தான் அந்தப் படத்தில் நாசரே நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமா கால வரிசையின் ஆகச்சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் நாசரின் பங்களிப்பு உள்ள திரைப்படங்கள் நிச்சயம் இருந்தே தீரும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியென பன்மொழித் திரைப்படங்களிலும் நாசருக்கான இடத்தை தவிர்க்கவே முடியாது.
பாகுபலி படத்தில் அந்த சிலை காட்சி நினைவிருக்கிறதா? தனக்கு தானே சிலை வைத்துக் கொண்ட அரசனின் பிம்பம் சிறிதாகி, எப்போதோ செத்து மடிந்த பாகுபலியின் நிழல் பெரிதாகுமே அதுபோலத்தான், நாயக பிம்பம் கொண்டவர்கள் என்னதான் கம்பீர சிலையாகி காட்சியளித்தாலும், பாகுபலி நிழல் போல நாசரின் நடிப்பும் உழைப்பும் வானாளவியது என்பதே நிதர்சனம்!
மார்ச் 5 - இன்று நாசர் பிறந்தநாள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT