Published : 04 Mar 2025 10:10 PM
Last Updated : 04 Mar 2025 10:10 PM
சென்னை: இனி தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அறிவித்துள்ளார்.
இது குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: "நான் ஒரு நடிகையாக பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். இந்தக் கடிதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள் என்பதற்கான என் உள்ளார்ந்த ஆசையாக இருக்கட்டும்.
என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது, உங்கள் எல்லையற்ற அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின்போது என்னை தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்.
நீங்கள் பலரும் எனக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை ‘நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான். ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத் தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.
நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதை கொண்டுவந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதை தெரிந்துகொள்வதில் எனக்கு பேரானந்தம். அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது. அதை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம்” இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT