Published : 04 Mar 2025 06:24 PM
Last Updated : 04 Mar 2025 06:24 PM
மேகலா பிக்சர்ஸ் சார்பில் மு.கருணாநிதி, ஆர்.எம். வீரப்பன், ஏ.காசிலிங்கம் இணைந்து தயாரித்த படம், ‘குறவஞ்சி’. கதை, வசனத்தை மு.கருணாநிதி தனது தனித்துவமான ஸ்டைலில் எழுதினார். அவருக்கு நெருக்கமானவராக இருந்த ஏ.காசிலிங்கம் படத்தை இயக்கினார். இவர் எடிட்டராக இருந்து இயக்குநர் ஆனவர்.
இன்பபுரி அரசன் தனது நாட்டின் ஒரு பகுதியை தம்பி முகாரிக்குக் கொடுக்கிறார். இமயா என்ற முதல் அமைச்சரின் கைப்பாவையாகி அவரது சதியில் சிக்குகிறார், முகாரி. அதைக் கண்டு வெகுண்டெழும் கதிரவன் என்ற இளைஞர், மக்களைத் திரட்டுகிறார். இன்பபுரி இளவரசி குமரி, கதிரவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் கதிரவன் மீனவர் குலப் பெண்ணான பொன்னியை காதலிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
இதில், கதிரவனாக சிவாஜி, இளவரசி குமரியாக சாவித்திரி, பொன்னியாக மைனாவதி நடித்தனர். இவர்கள் தவிர, பண்டரி பாய், ஓ.ஏ.கே. தேவர், ‘குலதெய்வம்’ ராஜகோபால், ஆர். பாலசுப்பிரமணியம், சி.கே. சரஸ்வதி, ராதாபாய், எஸ்.ஆர். கோபால், டி.கே. சம்பங்கி, எம்.என். கிருஷ்ணன், எம்.ஆர். சந்தானம், செந்தாமரை, என்.எஸ்.நடராஜன், கிருஷ்ணமூர்த்தி என பலர் நடித்தனர்.
டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார். பாடல்களைத் தஞ்சை ராமையா தாஸ், ரா.கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன் எழுதினர். சி.எஸ்.ஜெயராமன், சுசீலா, பி.லீலா, ஏ.எல்.ராகவன், ஜிக்கி, ஜமுனா ராணி பாடினர்.
‘காதல் கடல் கரையோரமே’, பி.சுசீலா பாடிய ‘காதல் பொல்லாது காத்திருக்கச் சொல்லாது', ‘செங்கையில் வண்டு கலின்’, ‘எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு’, ‘படியளப்பேன் என்று பாராள வந்தவன் தடியெடுத்தானடி முத்தம்மா’, ‘யார் சொல்லுவார் நிலவே’ என்பது உட்பட பாடல்கள் அனைத்தும் அப்போது வரவேற்பைப் பெற்றன. கருணாநிதி எழுதிய ‘அலை இருக்குது கடலிலே’ பாடலுக்கான நடனம் அப்போது பேசப்பட்டது.
இந்தப் படத்தில் கதிரவன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது எஸ்.எஸ்.ராஜேந்திரன். அவருக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகினார் எஸ்.எஸ்.ஆர். இதனால் சிவாஜியிடம் பேசினார்கள். எஸ்.எஸ்.ஆர் ஏதும் நினைப்பாரோ என முதலில் தயங்கிய சிவாஜியிடம், ‘என் நண்பரான நீங்கள் இதில் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி. இதையடுத்து உடனடியாக சம்மதித்தாராம் சிவாஜி.
சிவாஜியின் 60-வது படமான இதில் நாயகியாக முதலில் நடிக்க இருந்தவர் ராஜசுலோச்சனா. சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.
1960-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் சிறந்த வசனங்கள், சிறப்பான நடிப்பு இருந்தபோதும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT