Published : 02 Mar 2025 11:00 AM
Last Updated : 02 Mar 2025 11:00 AM
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் சாதனையை முறியடித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டீசர்.
பிப்.28-ம் தேதி இரவு 7:03 மணிக்கு இணையத்தில் வெளியானது ‘குட் பேட் அக்லி’ டீசர். அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி தீர்த்தனர். இதனால், இந்த டீசர் பார்வைகள் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே தமிழில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை அடைந்த டீசர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
‘குட் பேட் அக்லி’ டீசருக்கு முன்னதாக, ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் தான் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கொண்ட டீசர் என்ற சாதனையை படைத்திருந்தது. 19.35 மில்லியன் பார்வைகளைக் கொண்டதாக இருந்தது. தற்போது இதனை முறியடித்து 24 மணி நேரத்தில் 31.1 மில்லியன் பார்வைகளை அடைந்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’ டீசர். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
‘குட் பேட் அக்லி’ டீசர் 31.1 மில்லியன், ‘மாஸ்டர்’ டீசர் 19.35 மில்லியன், ‘கேப்டன் மில்லர்’ டீசர் 17.46 மில்லியன், ‘சர்கார்’ டீசர் 14.92 மில்லியன் மற்றும் ‘கங்குவா’ டீசர் 14.72 மில்லியன் ஆகியவை வரிசையில் தற்போது இருக்கிறது. இதன்படி பல மடங்கு முன்னிலை பெற்று முதலிடத்தில் இருக்கிறது ‘குட் பேட் அக்லி’ டீசர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடுகிறது.
டீசர் எப்படி? - ‘கேஜிஎஃப்’ பாணி பில்டப்புடன் தொடங்குகிறது டீசர். “ஏகே ஒரு ரெட் டிராகன்... அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான்’ என்று தெறிக்கிறது அந்த பில்டப். பில்டப் வசனத்துக்கு இடையே அஜித்தின் அறிமுகம் அதகளமாக இருக்கிறது.
‘நாம எவ்ளோ ‘குட்’டா இருந்தாலும்... இந்த உலகம் நம்மள ‘பேட்’ ஆக்குது’ என்ற அஜித்தின் வாய்ஸும், அப்போது வருகின்ற அவரது வெவ்வேறு கேட்டப்களும் ஈர்க்கிறது. முழுக்க முழுக்க அஜித்தின் ஆக்ஷன்களும், எமோஷன்களும் வெளிப்படும் இந்த டீசர், ‘குட் பேட் அக்லி’ நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத் தெரிகிறது. அதற்கு ஏற்பவே, பீப் சொல்லுக்குப் பிறகு ‘காட்றேன்...’ என டீசரில் முடிக்கிறார் அஜித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT