Published : 28 Feb 2025 01:13 PM
Last Updated : 28 Feb 2025 01:13 PM
நாயகனாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதற்குதான் விரும்புகிறேன் என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.
அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன், லைலா, சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சப்தம்’. 7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் முழுக்க சத்தத்தின் பின்னணில் உருவாகியுள்ள ஹாரர் படமாகும். இதனை நல்ல ஒலியமைப்பில் உள்ள திரையரங்கில் காண வேண்டும் என்று இயக்குநர் அறிவழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே பத்திரிகையாளர்கள் மத்தியில் ஆதி பேசும்போது, “எனது இரண்டாவது படமே அறிவழகன் சாருடன்தான். ‘ஈரம்’ உருவான சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களே வித்தியாசமாக இருந்தது. அதனால் இந்த முறை சேர்ந்து பணியாற்றும் போது இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தது. அவர் காட்சிகளை உருவாக்கும் விதம், சின்ன சின்ன நுணுக்கங்களை மேற்கொள்வது எல்லாவற்றையும் அழகாக செய்வார். ‘ஈரம்’ முடிந்த பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தோம். அது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. உடனே மற்றவர்களையும் உஷார்படுத்தி சீக்கிரமாக படப்பிடிப்பை நடத்தி விட்டு கிளம்பிவிட்டோம். ‘ஈரம்’ படத்தில் பணியாற்றும்போது எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக சில ஆராய்ச்சிகளை நான் படிக்கும்போது, வீடியோக்களை பார்க்கும்போது அமானுஷ்ய விஷயங்கள் இருக்கலாம் என ஒரளவுக்கு நம்பத்தான் தோன்றுகிறது.
தமிழ், தெலுங்கு என மொழிகள் பிரித்துப் பார்த்து படம் பண்ணுவதில்லை. தெலுங்கில் அதிகம் நடிப்பது போன்று தோற்றம் இருக்கலாம். ஆனால் இந்த வருடம் தமிழில் ‘சப்தம்’, ‘மரகத நாணயம் 2’ என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன. ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் அதே குழுவினருடன் துவங்க இருக்கிறது.
தெலுங்கில் இப்போது பாலகிருஷ்ணா உடன் இணைந்து ‘அகாண்டா’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறேன். சப்தம் படத்தின் ட்ரெய்லரை அவரும் பார்த்து விட்டு பாராட்டினார். ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்குதான் விருப்பம். அந்த கதாபாத்திரத்துக்கு என பெரிதாக எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் வில்லனாக நடிப்பது ஒரு சுவாரஸ்யம்தான்.
அஜித் - விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை. இருந்தாலும் கதை தானே அதை தீர்மானிக்க வேண்டும். வெற்றி அடைந்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது தவறில்லை. ஆனால், நல்ல கதை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முதல் பாகத்தின் பெருமையை குறைத்தது போல் ஆகிவிடும்” என்று ஆதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT