Last Updated : 22 Feb, 2025 01:42 PM

 

Published : 22 Feb 2025 01:42 PM
Last Updated : 22 Feb 2025 01:42 PM

மீண்டும் இணைகிறது ‘டிராகன்’ கூட்டணி!

மீண்டும் இணைந்து பணிபுரிய ‘டிராகன்’ கூட்டணி முடிவு செய்திருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டிராகன்’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிக்கெட் புக்கிங் அதிகமாகி கொண்டிருப்பதால் இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடையும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் அடுத்த இடத்துக்கு நகர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, ‘டிராகன்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் அஸ்வத் மாரிமுத்து பேசும்போது, “ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் - அஸ்வத் மாரிமுத்து கூட்டணி திரும்ப நடக்கும். எஸ்.டி.ஆர் 51 முடித்துவிட்டு, பிரதீப் தேதிகள் எல்லாம் பார்த்துவிட்டு பண்ண முடிவு செய்திருக்கிறோம். 200% அப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தில் தான் நடக்கும்.

எனது அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. நம்பிக்கை என்பதில் தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘டிராகன்’ படம் பார்த்துவிட்டு அடுத்த படத்தின் வாய்ப்பை தரவில்லை. அப்படத்தின் படப்பிடிப்பு நடந்த விதத்தை வைத்துக் கொடுத்தார்கள். சொன்ன நேரம், பொருட்செலவு எல்லாமே அதற்கு காரணம். எஸ்.டி.ஆர் 51 உருவானது அப்படிதான்” என்று தெரிவித்துள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸ் பணிபுரிந்துள்ளார். வாசிக்க > டிராகன் Review: பிரதீப் ரங்கநாதனின் ‘பக்கா’ என்டர்டெயினர்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x