Published : 21 Feb 2025 01:37 PM
Last Updated : 21 Feb 2025 01:37 PM
‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களுக்குப் பிறகு இயக்குநராக தனுஷ் களமிறங்கியுள்ள மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. தான் இயக்கிய முதல் இரண்டு படங்களில் தானே நடித்திருந்த தனுஷ், இதில் முழுக்க முழுக்க புதியவர்களை களமிறக்கியுள்ளார்.
காதலில் பிரேக்-அப் ஆகி துவண்டு போயிருக்கும் ஹீரோ பிரபுவுக்கு (பவிஷ்) அவரது பள்ளி தோழியான ப்ரீத்தியுடன் (ப்ரியா பிரகாஷ் வாரியர்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. தனது வருங்கால மனைவியிடம் தனது உடைந்த காதலை பிரபு சொல்ல தொடங்கும்போது ஃப்ளாஷ்பேக் விரிகிறது.
சமையல் கலைஞரான பிரபுவும், சாப்பாட்டு விரும்பியான நிலாவும் (அனிகா சுரேந்திரன்) ஒரு பார்ட்டியில் சந்தித்து காதலில் விழுகின்றனர். பிரபுவை தனது பணக்கார தந்தையிடம் (சரத்குமார்) அறிமுகம் செய்து வைக்கிறார் நிலா. நிலாவின் தந்தைக்கு பிரபுவை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் பழகுவதற்கு கால அவகாசம் கேட்கிறார். இந்தச் சூழலில் நிலாவின் தந்தையை பற்றிய ஒரு உண்மை தெரியவருவதால் அது பற்றி வெளியே சொல்லாமல் சைலண்ட் ஆக நிலாவுடனான காதலை முறித்துக் கொள்கிறார் பிரபு.
சில மாதங்கள் கழித்து நிலாவின் திருமண அழைப்பிதழ் பிரபுவுக்கு கிடைக்கிறது. அந்த திருமணத்துக்கு செல்லுமாறு ப்ரீத்தி பிரபுவை கோவா அனுப்பி வைக்கிறார். இதன் பிறகு என்னவானது என்பதே திரைக்கதை.
படத்தின் டைட்டிலேயே ‘ஒரு வழக்கமான காதல் கதை’ என்று ஆடியன்ஸுக்கு சொல்லிவிடுகிறார் தனுஷ். போதாது என்று படத்தின் ஹீரோ தனது ஃப்ளாஷ்பேக்கை சொல்லத் தொடங்கும்போதே ‘ரொம்பவெல்லாம் எதிர்பார்க்காதீங்க’ என்று நமக்கு குறிப்பால் உணர்த்துகிறார். படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் ஆகியவை வெளியான போதே இது ‘Gen Z' இளைஞர்களை பற்றிய படம் என்பது தெரிந்துவிட்டது. ’கோல்டன் ஸ்பேர்ரோ’ பாடலும், படத்தின் ட்ரெய்லரும் அதற்கு ஏற்றபடி மிகவும் துள்ளலாக அமைந்து இப்படத்துக்கு எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது.
ஆனால், ட்ரெய்லரின் துள்ளலும் சுவாரஸ்யமும் படத்தின் பெரும்பாலான இடங்களில் தென்படவில்லை என்பதுதான் சோகமான உண்மை. சிம்பிளான கதைதான் என்றாலும் இக்கதைக்கு எமோஷனல் தொடர்பு மிகவும் முக்கியம். அது இப்படத்தில் எந்த இடத்திலும் கைகொடுக்கவில்லை. நாயகன் காதலில் விழும்போதும், பிரிவை சந்திக்கும்போது, அழும்போதும், சிரிக்கும்போதும் அது நமக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
லியான் பிரிட்டோவின் ‘ரிச்’ ஆன ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷின் துள்ளலான இசை என தரமான தொழில்நுட்ப பாசிட்டிவ்கள் இருந்தும் திரைக்கதையில் நேர்த்தி இல்லாததால் படம் எங்குமே ஒட்டவில்லை. ஆங்காங்கே மேத்யூ தாமஸ் அடிக்கும் கவுன்ட்டர்கள் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறது.
இளைஞர்களை கவர வேண்டும் என்பதற்காக பெண்களை திட்டும் பாடல்களோ, ஆபாச இரட்டை அர்த்த வசனங்களோ வைக்காமல் இருந்ததற்காக தனுஷை நிச்சயம் பாராட்டலாம். எனினும் படம் முழுக்க ஆண், பெண் என அனைவரும் பாரபட்சமின்றி குடித்துக் கொண்டே இருப்பது நெருடல். சில இடங்களில் காமெடி நன்றாக கைகொடுத்திருக்கிறது.
நாயகனாக பவிஷ். தனுஷின் சகோதரி மகனான பவிஷ் கிட்டத்தட்ட தனுஷின் க்ளோன் போலவே இருக்கிறார். தனுஷ் போலவே பேசுகிறார். தனுஷ் போலவே ஆடுகிறார். ஏற்கெனவே ஒரு தனுஷ் இருக்கும்போது இன்னொரு தனுஷ் எதற்கு என்று தோன்றுவதை தடுக்க இயலவில்லை. நடிப்பு, வசன உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
படம் முழுக்க ஹீரோவின் நண்பனாக ஸ்கோர் செய்பவர் மேத்யூ தாமஸ். ஆங்காங்கே சில இடங்களில் டப்பிங் பிரச்சினை இருந்தாலும் அவர் அடிக்கும் கவுன்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இரண்டாம் பாதியில் கோவாவில் அவருக்கான காட்சிகள் சரவெடி. தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரலாம்.
அனிகா சுரேந்திரனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ஆனால் அவரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தவில்லை. படத்திலேயே மிக அழுத்தமான கதாபாத்திரம் சரத்குமாருக்கு. சிறிது நேரம் வந்தாலும் தனது முதிர்ச்சியான நடிப்பால் கவர்கிறார். இரண்டாம் பாதியில் அஞ்சலி என்ற கேரக்டரில் வரும் ரம்யா ரங்கநாதனுக்கு தமிழில் நல்ல எதிர்காலம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு சிறப்பான நடிப்பு.
ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு. க்ளைமாக்ஸில் தனுஷ் குரலில் சில நொடிகள் வரும் பாடல் மனதை வருடுகிறது.
படத்தில் சரத்குமார் ஹீரோவிடம் ‘நீ ஒரு மிடில் கிளாஸ், எந்த வேலையும் இல்லாதவன்’ என்று மட்டம் தட்டும் ஒரு காட்சி வருகிறது. லேட்டஸ்ட் ஐபோன், ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் பைக், நினைத்த நேரத்தில் பார்ட்டி, நினைத்த நேரத்தில் கோவாவுக்கு ப்ளைட்டில் போவது என பாவப்பட்ட மிடில் கிளாஸ் ஹீரோ. கடைசியாக இப்படிப்பட்ட மிடில் கிளாஸ் ஹீரோவை கவுதம் மேனன் படங்களில் பார்த்தது.
2கே தலைமுறையில் வாழ்வியலை(?) படமாக எடுக்கிறேன் பார் என்று தனுஷ் முடிவு செய்தது ஓகே. ஆனால் அது அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதையை அமைக்காமல், பிரதான நடிகர்களிடமிருந்து சிறப்பான நடிப்பை பெறாததால் இந்த ‘வழக்கமான காதல் கதை’ ஒரு ‘அவுட்டேட்டட்’ காதல் கதையாக மாறிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT