Published : 17 Feb 2025 02:36 PM
Last Updated : 17 Feb 2025 02:36 PM
சென்னை: ‘ஏஞ்சல்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில்,‘ஏஞ்சல்’என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கி, 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், ‘மாமன்னன்’ படத்தில் நடித்த உதயநிதி அந்த படமே தனது கடைசி படம் என கூறிவிட்டார். ‘ஏஞ்சல்’ படத்துக்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி உதயநிதி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்து வருகிறார். ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். ரூ.25 கோடி இழப்பீடாக தர வேண்டும்,” என்று அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT