Published : 17 Feb 2025 10:45 AM
Last Updated : 17 Feb 2025 10:45 AM
ஒரு ஓட்டு வாங்கி தோற்றுப் போன அரசியல்வாதி முத்தையாவுக்கு (கவுண்டமணி) மூன்று தங்கைகள். அவர்களை ஒரே வீட்டில் இருக்கும் 3 சகோதரர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க நினைக்கிறார், அவர்.
ஆனால், குணா (வாசன் கார்த்திக்), சத்யா (அன்பு மயில்சாமி), தேவா (கஜேஸ் நாகேஷ்) ஆகியோரை காதலிக்கிறார்கள் தங்கைகள். இதற்கிடையே இடைத்தேர்தலில் கட்சி, தனக்கு சீட் தராததால் சுயேச்சையாகப் போட்டியிருக்கிறார் முத்தையா. அவர் தேர்தலில் வென்றாரா, அவர் நினைத்தபடி சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்தாரா? என்பது கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி கிங் கவுண்டமணி நடித்துள்ளார் என்பதால், பார்வையாளர்களிடையே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு பக்கம் குடும்பக் கதையாகவும் இன்னொரு பக்கம் அரசியல் நையாண்டியாகவும் இயக்குநர் சாய் ராஜகோபால் கொண்டு சென்றிருக்கும் திரைக்கதை, இரண்டு டிராக்குக்கும் நியாயம் செய்திருக்க வேண்டும்.
குடும்பக் கதையில், ஒரே வீட்டில் இருக்கும் சகோதரர்களுக்குத் தனது தங்கைகளைத் திருமணம் செய்துகொடுப்பதற்கு கவுண்டமணி சொல்லும் காரணம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. வழக்கமான கவுண்டமணி படங்களில் அரசியல் நையாண்டி ரசிக்க வைக்கும் என்று நினைத்து இதிலும் எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றமே. தியானம் செய்வது, தரையில் அடித்து சத்தியம் செய்வது, வாய்ப்பில்லை ராஜா என்பது உள்ளிட்ட நிஜ அரசியல் சம்பவங்கள் சிலவற்றை கலாய்த்திருக்கும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. அதே போல, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பது போன்ற கவுண்டமணியின் வசனங்களையே அவருக்கு எதிராகப் பேசுவதும் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் மேக்கிங்கிலும் காட்சி அமைப்பிலும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கவுண்டமணியை மட்டுமே நம்பி உருவாகி இருக்கும் படம் என்பதால் மற்றவர்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. சித்ரா லட்சுமணன், ரவிமரியா, யோகிபாபு, சிங்கமுத்து, வையாபுரி, முத்துக்காளை, மொட்டை ராஜேந்திரன் என பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் சிரிப்புக்குப் பஞ்சமே.
ஓஏகே சுந்தர், வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ் உள்ளிட்ட நடிகர்கள், கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ராஜா சேதுபதி மற்றும் நோயலின் படத்தொகுப்பு இன்னும் கச்சிதமாக இருந்திருக்கலாம். கொடுத்த வாய்ப்புக்குள் காத்தவராயனின் ஒளிப்பதிவும் சித்தார்த் விபினின் பின்னணி இசையும் படத்தைக் காப்பாற்றப் போராடியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT