Published : 16 Feb 2025 01:19 PM
Last Updated : 16 Feb 2025 01:19 PM

மாடப்புறா: எம்.ஜி.ஆருக்காக அவசரமாக உருவாக்கப்பட்ட கதை | அரி(றி)ய சினிமா

எம்.ஜி.ஆர் நடித்து சூப்பர் ஹிட்டான படங்கள் அதிகம் இருந்தாலும் சில படங்கள் ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன. அதில் ஒன்று ‘மாடப்புறா’. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பச் செட்டியாரின் மைத்துனர் பி.வள்ளிநாயகம், பிவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தபடம் இது.

இதில் சரோஜா தேவி, எம்.ஆர். ராதா, எம்.என்.நம்பியார், கே.வசந்தி பி.ஏ, ஜெமினி சந்திரா, ‘குலதெய்வம்’ ராஜகோபால், எம்.கே.முஸ்தபா, டி.கே.பாலச்சந்திரன், என்.எஸ். நாராயண பிள்ளை, சீதாலட்சுமி என பலர் நடித்தனர். இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் சவுகார் ஜானகி, சில காரணங்களால் அவர் விலகினார். பின்னர் சரோஜாதேவி படத்துக்குள் வந்தார்.

தேனிலவு படம் மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை கே. வசந்தி, இதில் இன்னொரு நாயகியாக நடித்தார். மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் அவனா இவன், பலே பாண்டியா, பொம்மை என பல படங்களில் நடித்திருக்கிறார். அந்தக் காலத்தில் பி.ஏ படித்தவர் இவர். அப்போது அது பெரிய படிப்பு என்பதால் டைட்டிலில் அவர் பெயருக்குப் பின்னால் கே.வசந்தி பி.ஏ என்றே குறிப்பிடுவார்கள். ‘மாடப்புறா’ படத்திலும் அப்படித்தான்.

இந்தப் படத்தின் கதை, வசனத்தை நாடக ஆசிரியரான ‘திலகம்’ நாராயணசாமி எழுதினார். அவரது நாடகமான ‘திலகம்’ வெற்றிபெற்றதால் நாராயணசாமி என்கிற அவர் பெயருக்கு முன்னால் ‘திலகம்’ சேர்ந்துகொண்டது. நாயகன் எம்.ஜி.ஆரை வசந்தியும் சரோஜாதேவியும் காதலிக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், வழக்கறிஞரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறார். பழியை ஏற்றுக்கொள்ளும் எம்.ஜி.ஆர், போலீஸிடம் இருந்து தப்பிக்கிறார். வில்லனாக வருகிறார் நம்பியார். அந்தக் கொலையை செய்தது யார்? எம்.ஜி.ஆர் என்ன ஆனார், அவர் காதல் என்ன ஆனது? என்பது கதை.

எஸ்.ஏ.சுப்பராமன் படத்தை இயக்கினார். பள்ளி ஆசிரியரான இவர், கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண் டவர். அந்த ஆர்வம் அவரை சினிமாவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது. படத்தில் எம்.ஆர்.ராதா பேசும் வசனங்கள் பேசப்பட்டன.

கே.வி.மகாதேவன் இசை அமைத்த இந்தப் இந்தப் படத்துக்கு ‘வயலின்’ மகாதேவன் பின்னணி இசை அமைத்தார். மருதகாசி பாடல்களை எழுதினார். ஊருக்கும் தெரியாது யாருக்கும் தெரியாது, சிரிக்கத் தெரிந்தால் போதும், வருவார் ஒருநாள், கண்ணைப் பறிக்குதா, கண்ணிரண்டும் தேவையில்லை, மனதில் கொண்ட ஆசைகள் என பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படம் கோடம்பாக்கத்தில் அப்போதிருந்த மெஜஸ்டிக் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.

1961-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’ போன்ற படங்கள் வசூல் அள்ளியதால் அவர் நடிப்பில் சமூக படங்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்று நினைத்தனர். அதனால் அவசர அவசரமாக உருவாக்கிய படம் என்று மாடப்புறாவைச் சொல்வார்கள்.

கதை, திரைக்கதையில் குழப்பம். அதோடு எம்.ஜி.ஆருக்கு அதிகமான சோகக் காட்சிகளையும் வைத்திருந்தனர். அவர் காதலிப்பது ஒருவராகவும் சந்தர்ப்ப சூழ்நிலையால் மற்றொருவரைத் திருமணம் செய்து கொள்வது போலவும் அமைக்கப்பட்ட கதையை ரசிகர்கள் அதிகம் விரும்பவில்லை. 1962-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் பாடல்களுக்காகவும் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்காகவும் இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x