Published : 15 Feb 2025 07:18 PM
Last Updated : 15 Feb 2025 07:18 PM

“சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவினார்” - வயநாடு வெள்ளத்தில் வீட்டை இழந்த கிரிக்கெட்டர் சஜனா நெகிழ்ச்சி

வயநாடு வெள்ளத்தில் வீடு, பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் தானக முன்வந்து உதவி செய்ததாக ‘கனா’ திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான எஸ்.சஜனா தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்தி ஊடகம் ஒன்றுக்கு சஜனா அளித்துள்ளப் பேட்டியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அந்த ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திக்கேயன் உதவியத் தகவலை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2024 ஐபிஎல் வெற்றி, தனது விளையாட்டு வாழ்வு பற்றி சஜனா அளித்துள்ள அந்த நீண்ட பேட்டியில், “2018 வயநாடு வெள்ளத்தின்போது தனது வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதில் நான் வாங்கிய கோப்பைகள், மெடல்கள், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அந்தக் கையறு நிலைதான் நான் எத்தனை ஆதரவான சூழலில் உள்ளேன் என்பதை உணர்த்தியது. பல எதிர்பாராத உதவிகளையும் பெற்றுத் தந்தது.

அப்படியான ஓர் உதவிதான் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தது. சிவகார்த்திகேயன் சார் என்னை அழைத்துப் பேசினார். உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். நான் அவரிடம் “அண்ணா, என்னுடைய கிரிக்கெட் கிட் மொத்தமாக வெள்ளத்தில் போய்விட்டது. எனக்கு புதிதாக ஒரு ஸ்பிக்ஸ் வேண்டும்” என்று கேட்டேன். அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு புதிய ஸ்பிக்ஸ் கிடைத்தது" என்கிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கனா’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் சஜனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். படத்தினை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருப்பார். கிராத்தில் இருந்து இந்திய அணிக்காக விளையாட துடிக்கும் ஒரு பெண்ணின் கதையைச் சொன்ன இப்படம், அதனூடாக விவசாயத்தின் தேவையையும் வலியுறுத்தியிருக்கும். இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினையும் பெற்றிருந்தது.

இந்தப் படத்தில் கடைசி காட்சிகளில், ஐஸ்வர்யாவிடம் பிரச்சினை செய்து பின்பு தனது தவறை உணரும் சக வீராங்கனை பாத்திரத்தில் நடித்திருப்பார் அசல் கிரிக்கெட் வீராங்கனை சஜனா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x