Last Updated : 15 Feb, 2025 05:49 PM

 

Published : 15 Feb 2025 05:49 PM
Last Updated : 15 Feb 2025 05:49 PM

“சரியாக சம்பளம் வருவதே அரிது...” - ‘அமரன்’ நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேச்சு

சம்பள விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்தைப் பெருமையாக பேசினார் நடிகர் சிவகார்த்திகேயன். அத்துடன், சில விஷயங்களையும் பகிரங்கமாக போட்டுடைத்தார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. 100 நாட்களை கடந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவினை கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்ததால் படக்குழுவினர் நடத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன்.

இதனைத் தொடர்ந்து ‘அமரன்’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. முழுமையாக தொலைக்காட்சிக்கான விழாவாக நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயனை மிகவும் புகழ்ந்து பேசினார் கமல்.

“வீடு கட்டிய பணம் போக, மீதமுள்ள பணத்தினை சினிமாவில் தான் முதலீடு செய்கிறார் சிவகார்த்திகேயன். இதன்மூலம் இவர் நம் அலைவரிசையில் உள்ள ஆள் என தெரிந்துக் கொண்டேன்” என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் கமல்ஹாசன்.

சிவகார்த்திகேயன் பேசும்போது படக்குழுவினர், தயாரிப்பு நிறுவனம் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். தன் பேச்சில் சிவகார்த்திகேயன், “எனக்கு சரியாக சம்பளம் வந்துவிட்டது சார். அதுவே தமிழ் சினிமாவில் அரிது. இங்குள்ள அன்பு அண்ணனுக்கு தெரியும்.

எனது படங்கள் வெளியாகும் முந்தைய நாள் அன்பு அண்ணன் அலுவலகத்தில் தான் இருப்பேன். சம்பளம் கொடுக்காமல் மட்டுமல்ல, பாதி சம்பளத்தையும் வாங்கிக் கொண்டும் போய்விடுகிறார்கள் சார். அதற்கு இங்கு 2-3 குரூப் இருக்கிறது. அப்படியெல்லாம் நடக்கும் இந்த காலகட்டத்தில், நீங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு தான் வந்திருப்பீர்கள்.

எனக்கு இது ஆச்சரியம் தான் சார். ஏனென்றால் படம் வெளியாவதற்கு 6 மாதத்திற்கு முன்பே முழுசம்பளத்தையும் கொடுத்து, அதை தாண்டி மரியாதையும் தெளிவாக கொடுத்தார்கள். இப்படியிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பார்த்து ரொம்பவே அரிது” என்று குறிப்பிட்டார்.

இப்படி பேசும் போது பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் இந்த விழாவில் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 24 ஏ.எம் நிறுவனம் சார்ந்த கடனை சிவகார்த்திகேயனிடம் பேசி வாங்கியதை தான் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டு இருப்பதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x