Published : 14 Feb 2025 04:24 PM
Last Updated : 14 Feb 2025 04:24 PM
காதலர் தினத்தன்று தான் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு புதிய படங்கள் குறித்த அறிவிப்புகள், காதலை மையப்படுத்திய பாடல்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வருகின்றன. இதனிடையே, சீமான் இயக்கத்தில் தான் நடிக்கவிருந்த படம் குறித்த பழைய அறிவிப்பு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
அந்தப் பதிவில் பார்த்திபன், “‘காதல் ஒழிக’ - இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை நண்பர் சீமான் இயக்க, நான் நடிப்பதற்காக கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு. படம் கைவிடபட்டாலும் நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது.
என் சில கவிதைகளை அவர் சிலாகித்து மேடையில் பாராட்டும் போது அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகளில் சில புதூ தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது. நானும் ஒரு ஒலி வாங்கிப் போல் அவர் பேச்சை மிக அருகில் இருந்து ரசிப்பேன் . இருவரின் அரசியலும் தத்துவமும் கருத்தும் விருப்பமும் வெவ்வேறாக இருப்பினும்,
‘கடவுள் இல்லை’ - பெரியார், ‘பெரியாரே இல்லை’ - சீமான், அவரவரது குரலை உரக்க ஒலிக்கச் செய்வதாகவே நான் பார்க்கிறேன். நானும் அப்படியே எனக்கு சரியெனப் பட்டதை பட்டவர்த்தனமாக பேசுகிறேன். (அரசியல் + இன்ன பிற லாப நோக்கின்றி) புரிந்தோர் பிஸ்தாக்கள்; புரியாதோர் பிஸ்கோத்துகள்!
சரி காதலுக்கு வருவோம்!
வருவதும் போவதும் வாடிக்கையே காதலுக்கு. வருவதெல்லாம் போவதும் வாடிக்கையே சாதலுக்கு! என்றோ மிடித்துப்போனது இன்று பிடிக்காமல் போய் சீமான் சுவரில் பெரியார் புகைப்படம் போல தான் இந்தப் பாழாய் போன காதலும். ‘என் இதயத்தில் அவள் அடித்து விட்டுச் சென்ற ஆணியில் கூட அவள் புகைப்படத்தைதான் மாட்டி விட்டிருக்கிறேன்’ என என் நண்பர் ஒருவர் எழுதியதைப் போல...
போன வருடம்
போன காதல்
வேறு பூமியில்
வேர் பிடித்துப் பூத்துக் குலுங்கும் .-அது
புரியாத-இன்னும்
பிரியாத -உயிர்வரை
பிரிந்திடாத ஒரு
காதலை
‘காதல் ஒழிக’ என
இக் காதலர் தினத்தில்
கொண்டாடும்!- புதிதாய்
பூத்தவர்கள்
பூத்தரேக்குலு சுவைத்து
கொண்டாட்டும்,
தோத்தவர்கள்
காத்திருங்கள்...
அவளை/அவனை
சுமந்து கர்ப்பமான இதயத்தில்
கன்றாவி கவிதையாவது பிறக்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா காதல் உய்க்கும் - பின்
பொய்க்கும்” என்று பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT