Last Updated : 13 Feb, 2025 02:50 PM

 

Published : 13 Feb 2025 02:50 PM
Last Updated : 13 Feb 2025 02:50 PM

பவதாரிணி இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா உருக்கம்!

பவதாரிணி இந்த உலகை விட்டு செல்வதற்கு முன் என்னுடன் கழித்த நாட்களை மறக்க முடியாதது என்று இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஜலீல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங், இளவரசு, ராதாரவி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தினை ஈசன் இயக்கியுள்ளார். மறைந்த இசையமைப்பாளர் பவதாரிணி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் உருவான கடைசி படமும் இது.

பிப்ரவரி 12-ம் தேதி பவதாரிணியின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஒரு சேர அனுஷ்டிக்கப்பட்டது. அந்த விழாவில் அவரது இசையமைப்பில் உருவான ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இசையினை இளையராஜா வெளியிட்டார்.

அந்த விழாவில் இளையராஜா பவதாரிணி பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டது மட்டுமன்றி பவதாரிணி இதுவரை பாடிய பாடல்களை தனது இசைக்குழு மூலமாக இசைக்க செய்தார். இந்த நிகழ்வில் கங்கை அமரன், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் டி.சிவா, ஜெ .எம். பஷீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பவதாரிணிக்கு தங்களது நினைவஞ்சலியை செலுத்தினர்.

இந்த விழாவில் இளையராஜா பேசும் போது, “இன்று தான் பவதாரிணி பிறந்தநாளும் கூட. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய பிறந்த நாளும் அவர் இறந்த திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. பெரும்பாலும் இப்படி யாருக்கும் அமைந்ததில்லை. அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அவர் கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இங்கே நடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். பவதாரிணி இந்த உலகை விட்டு செல்வதற்கு முன் என்னுடன் கழித்த நாட்கள் என்னால் மறக்க முடியாதது” என்று நெகிழ்வுடன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x