Published : 10 Feb 2025 10:42 AM
Last Updated : 10 Feb 2025 10:42 AM
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியிருக்கும் 3-வது படம், ‘அகத்தியா’. ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு, ஐரோப்பிய நடிகை மெடில்டா என பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ், வேம் இந்தியா அனீஷ் அர்ஜுன் தேவ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. பா.விஜய்யிடம் பேசினோம்.
‘அகத்தியா’, ஹாரர் ஃபேன்டஸி படம்னு சொன்னாங்களே?
உண்மைதான். நம்ம கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிற கதையும் இருக்கும். அதுல 1940-ல் நடக்கிற ஒரு கதைக்களத்தையும் இப்போ நடக்கிற கதைக்களத்தையும் இணைக்கும் பாலம்தான், திரைக்கதை. வழக்கமா ஹாரர் படங்களுக்குனு ஒரு பேட்டர்ன் இருக்குல்ல, அதுல இருந்து மாற்றி புதுசா பண்ணலாம்னு யோசிச்சு இந்தக் கதையை உருவாக்கி இருக்கோம். பிரெஞ்ச் காலகட்டத்துல ஒரு பகுதி கதை நடக்கறதால புதுச்சேரியிலயும் ஷூட் பண்ணியிருக்கோம். இது ஃபேமிலியா எல்லோரும் பார்க்கும்படியான படம். கூடவே நல்ல மெசேஜும் இருக்கு.
ஃபேன்டஸி ஹாரர் படம்னா, கிராபிக்ஸ் அதிகம் இருக்குமே…
கண்டிப்பா. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கு. குழந்தைகளுக்குக் கண்டிப்பா பிடிக்கும். அதுமட்டுமில்லாம கிளைமாக்ஸ் காட்சி நிச்சயமா புதுசாகவும் விஷுவல் ட்ரீட்டாகவும் இருக்கும். இதுவரை தமிழ்ல அப்படி வந்ததில்லை. மோஷன் கேப்சர் டெக்னாலஜியில படமாக்கி, அதை 3டி-க்கு மாற்றி, லைட்டிங்ல இருந்து டெக்னிக்கலா நிறைய வேலை பார்த்திருக்கோம். அது உண்மையிலேயே எல்லோருக்கும் பிடிக்கும்.
அரண்மனை செட் அமைச்சீங்களாமே?
கதையில அது முக்கிய பங்கு வசிக்கிறதால, ஈவிபி ஸ்டூடியோவுல செட் போட்டோம். அதுக்கே நிறைய செலவு ஆச்சு. அதை படத்துல பார்த்தா அவ்வளவு ‘ரிச்’சாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும். காடு மாதிரியான ஒரு அரங்கை கோகுலம் ஸ்டூடியோவில் அமைச்சோம். இரண்டுமே அருமையா இருக்கும்.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், சமீபகாலமாக நெகட்டிவ் கேரக்டர்ல நடிச்சுட்டு வர்றார்... இதுலயும் அப்படித்தானா?
இல்லை. இதுல அவருக்கு முக்கியமான, முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார். அவர் வர்ற இடங்கள் ரொம்ப அருமையா இருக்கும். இந்தப் படத்துல குழந்தைகளுக்குப் பிடிக்கிற நிறைய விஷயங்கள் இருக்கு. அவங்களுக்கு இந்தப் படம் பற்றிய ஆர்வத்தைக் கொடுக்கணுங்கறதுக்காக கேம் ஆப் உருவாக்கினோம். அது சக்சஸ் ஆச்சு. படத்துக்கு அது பலமா இருக்கும்னு நம்பறோம்.
உங்க முந்தைய படங்களை விட இது பட்ஜெட்டாகவும் அதிகம்... என்ன சவால்களை எதிர்கொண்டீங்க?
இந்தக் கதை கொஞ்சம் பெரிசு. முதல்ல பொருளாதார ரீதியா பாதுகாப்பான ஏரியாவா இருக்கும்னு ஹாரர் கதையை தேர்வு பண்ணினோம். இன்னும் கொஞ்சம் புதுசா யோசிக்கலாம்னு முடிவு பண்ணி, ஃபேன்டஸியை சேர்த்தோம். அதுக்கும் படத்துக்கான செட், கிராபிக்ஸுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க வந்ததால அதெல் லாம் சாத்தியமாச்சு. இது எல்லாமே சவால்கள் தான். இந்தப் படம் எனக்கும் இதுல பணியாற்றியவங்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுத்திருக்கு. கேமராமேன் தீபக் குமார் பதியோட திறமை கண்டிப்பா பேசப்படறதா இருக்கும். அதே போல யுவன் சங்கர் ராஜாவின் இசையும் மிரட்டலாக இருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தியில படம் ரிலீஸ் ஆகுது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT