Published : 09 Feb 2025 07:29 AM
Last Updated : 09 Feb 2025 07:29 AM
சுசீந்திரன் இயக்கியுள்ள படம், 2கே லவ் ஸ்டோரி, ஜெகவீர நாயகனாக அறிமுகமாகும் இதில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். திருமண போட்டோ எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் இது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பிப் 14-ம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன் தினம் நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “திட்டமிடலில் இயக்குநர் சுசீந்திரனை மிஞ்ச முடியாது. அதுதான் அவரிடம் இருக்கும் சிறப்பு. ஒரு படத்தை எப்படிக் குறுகிய காலத்தில் முடிக்க முடியும் என்பதை, அவரிடம் கற்றுக் கொள்ளலாம். ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, செலவினங்களை இழுத்துவிட்டு, இறுதியில் படத்திலும் ஒன்றும் இல்லாமல், செலவையும் அதிகமாக்கிவிடும் இயக்குநர்கள் இந்த காலத்தில் இருக்கிறார்கள். அதை உடைத்துத் திட்டமிடலில் சாதித்துக் காட்டுகிறார் சுசீந்திரன். ஒரு படத்தைத் தயாரிப்பது மிக எளிது அதை வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடினம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது, “வெண்ணிலா கபடி குழு படத்துக்குப் பிறகு இதுவும் என் முதல் படம் போன்ற உணர்வைத் தந்துள்ளது. இந்தப் படத்தை நண்பர்களுள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன் பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி” என்றார்.
இயக்குநர்கள் செல்லா அய்யாவு, திரு, ராஜேஷ்வர் காளிசாமி, ஹரிஹரன், எஸ்.ஆர்.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT