Published : 08 Feb 2025 04:41 PM
Last Updated : 08 Feb 2025 04:41 PM
“பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தான செய்தி எப்போதும் அஜித்தை மனதளவில் பாதிக்கக் கூடியது” என்று இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 6-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூல் செய்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்த நாட்களில் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இதனிடையே ‘விடாமுயற்சி’ இயக்குநர் மகிழ் திருமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஜித் குமார் சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு இதயம் நிறைந்த நன்றி. ஆரம்ப சந்திப்புகளின் போது, பெண்களை மதிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக அடிக்கடி கூறுவார். எளிய குடும்ப பின்னணியில் வளர்ந்த எனக்கு இதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது.
பெண்களுக்கான கதை எனும்போது தயாரிப்பு நிறுவனமான லைகாவும் மகிழ்ச்சியாக சம்மதித்தனர். மிகப் பெரிய கமர்ஷியல் நடிகர்கள் படத்தில் இருந்தபோதும் இந்தக் கதைக்கு லைகா சம்மதித்தது சிறப்பான விஷயம். அஜித் சாரும் தன்னுடைய சினிமா பயணத்தில் நிறைய புதுவிதமான படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் தன் கரியரில் வளர்ந்து வரும்போதே ‘வாலி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். அதேபோல, ‘முகவரி’யில் கனவுகளும் லட்சியங்களும் கொண்ட ஒரு சாதாரண இளைஞனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். ‘விஸ்வாசம்’ போன்ற மாஸ் ஹிட் படம் கொடுத்த பிறகு கூட 'நேர்கொண்ட பார்வை' போன்ற படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.
பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தான செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதனால், அதுபற்றிய வலுவான மெசேஜ் 'விடாமுயற்சி' படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இருந்தாலும் அஜித் போன்ற மாஸ் நடிகருக்கான சில கமர்ஷியல் விஷயங்களை ரசிகர்கள் திரையில் எதிர்பார்ப்பார்களே என்ற எண்ணமும் எனக்கு இருந்தது.
ஆனால், அஜித் சார் என்னிடம் வந்து, "இந்தக் கதை அர்ஜுன் என்ற மிடில் கிளாஸ் மனிதனைப் பற்றியது. வேறு வழியே இல்லை என்றால் தவிர வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று நினைக்காதவன் அர்ஜுன். சரியான படத்தில் நடிக்கும் போது என் ரசிகர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். அந்த நம்பிக்கை சரியானது என்பது படம் வெளியானதும் என்னால் உணர முடிகிறது.
படத்துக்கு கிடைக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் இயக்குநருக்கு நிறைவான விஷயம். ரசிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார் மகிழ் திருமேனி.
லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைபபாளராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT