Published : 06 Feb 2025 02:32 PM
Last Updated : 06 Feb 2025 02:32 PM
இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களின் தீவிர காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ திரைப்படம். ட்ரெய்லர், பாடல்கள் பெரிதாக ஹைப் எதுவும் ஏற்றவில்லை என்றாலும், அஜித் என்ற நடிகருக்காக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் அதற்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.
அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் கொண்ட அர்ஜுன் (அஜித்) - கயல் (த்ரிஷா) தம்பதியின் வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல் ஏற்படுகிறது. இருவரும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்த தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். செல்லும் வழியில் ஓரிடத்தில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அந்த வழியாக ஒரு டெலிவரி டிரக்கில் வரும் ரக்ஷித் (அர்ஜுன்), தீபிகா (ரெஜினா) தம்பதி, அவர்களுக்கு உதவும் பொருட்டு த்ரிஷாவை அழைத்துச் சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு கஃபேயில் இறக்கிவிடுவதாக உறுதி அளிக்கின்றனர். கார் சரியானதும் அந்த கஃபேவுக்கு செல்லும் அர்ஜுன், அங்கு தனது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பல இடங்களில் தேடி அலைகிறார். இந்த தேடும் படலத்தில் பல முடிச்சுகள் அவர் முன்னால் அவிழ்கின்றன. மனைவியை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே ‘விடாமுயற்சி’யின் திரைக்கதை.
இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்துக்கான பேட்டிகளில் சொன்னது போலவே இது வழக்கமான அஜித் படம் அல்ல. ஓரிரு இடங்களை தவிர படத்தில் எந்தவித கமர்ஷியல் அம்சங்களும் இல்லை. இதனை முதலிலேயே மனதில் கொள்ளவேண்டியது அவசியம். படத்தின் முதல் காட்சியிலேயே எந்தவித ஆர்ப்பாட்டமோ, அலப்பறையோ, பில்டப்போ இல்லாமல் மிக மிக சாதாரணமாக அறிமுகம் ஆகிறார் அஜித். படம் முழுக்க தன்னுடைய இடத்தை விட பல படிகள் கீழே இறங்கி வந்து நடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த இடத்திலும் கைதட்டல் பெறவேண்டும் என்பதற்காக பில்டப்களை வலிந்து திணிக்காமல் இருந்ததற்கே அவரை மனதார பாராட்டலாம்.
படத்தின் முதல் பாதி முழுவதுமே கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போன்றே உணர்வே இருந்தது. படம் முழுக்க அஜர்பைஜானில் எடுக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என எந்த இடத்திலும் மிகைத்தன்மை இல்லாமல் கொண்டு சென்றது சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள் தவிர இடைவேளை ட்விஸ்ட் வரை படம் விறுவிறுப்பாகவே செல்கிறது. ஆரவ் - அஜித் இடையிலான காட்சிகள், அதன் பிறகு அர்ஜுன், ரெஜினா அறிமுகம், அவர்களின் பின்னணி என அடுத்தடுத்து வரும் காட்சிகள், திரைக்கதையை பில்டப் செய்ய உதவுகின்றன.
ஆனால், படத்தின் பிரச்சினையே இரண்டாம் பாதியில்தான். இடைவேளையில் வைக்கப்பட்ட ட்விஸ்டை இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே உடைத்தது மைனஸ். இதனால் பார்ப்பவர்களுக்கு இதன் பிறகு என்ன இருந்துவிடப் போகிறது என்ற மனநிலை வந்துவிடுகிறது. அதிலும் அஜித் பேங்க் ஒன்றில் போய் பணம் எடுப்பது, மீண்டும் த்ரிஷாவை தேடி அலைவது என சலிப்பை ஏற்படுத்தும் காட்சிகளால் திரைக்கதை நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதல் பாதியில் இருந்த எங்கேஜிங்கான காட்சிகள் முற்றிலுமாக இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.
இதுபோன்ற த்ரில்லர் கதைக்களத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஓரிரண்டு புத்திசாலித்தனமான காட்சிகளைத்தான். ஆனால் அதற்காக திரைக்கதையில் பெரிதாக மெனக்கெடாமல் ஒரே நேர்க்கோட்டில் கதையை சொல்லியிருப்பது ஏமாற்றம்.
ஒரு நடிகராக அஜித்துக்கு இது புதிய பரிமாணம். வழக்கமான கமர்ஷியல் அம்சங்களை இல்லாமல் இதில் அவருக்கு நடிப்பதற்கான இடங்கள் அதிகம். அதை கச்சிதமாக பயன்படுத்தவும் செய்திருக்கிறார். மூன்று விதமான ‘கிளாஸ்’ ஆன லுக்கில் கவர்கிறார். த்ரிஷா வரும் காட்சிகள் வெகு குறைவு என்பதால் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. அர்ஜுன் தன்னுடைய பங்கை சிறப்பாக் செய்திருக்கிறார். அஜித்தை வங்கிக்கு அனுப்பி பணத்தை எடுத்து வரச் சொல்லும் காட்சியில் அவரது நடிப்பு சிறப்பு. ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு பெரும் பலம். புழுதி வீசும் அஜர்பைஜான் நிலப்பரப்பை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஓம் பிரகாஷின் கேமரா. அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆக்ஷன் காட்சிகள் சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் அஜித் - அர்ஜுன் மோதிக் கொள்ளும் இடங்களில் ‘மங்காத்தா’ ரேஞ்சுக்கு எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்து இழுவையான காட்சிகளை கத்தரி போட்டிருந்தால் ஒரு நேர்த்தியான த்ரில்லர் படமாக வந்திருக்கும். ஸ்டைலிஷ் ஆன மேக்கிங் இருந்தும் கொட்டாவி வரவைக்கும் ‘ஜவ்வான’ இரண்டாம் பாதியால் ‘விடாமுயற்சி’ வீண்முயற்சி ஆகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT