Published : 06 Feb 2025 11:58 AM
Last Updated : 06 Feb 2025 11:58 AM

‘டிராகன்’ ஒரு கல்லூரி சீனியரின் கதை! - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேட்டி

‘லவ் டுடே’ மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் கவனிக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் நடித்து, அடுத்து வரும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித் திருக்கும் இந்தப் படத்தை, ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். வரும் 21-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி இயக்குநரிடம் பேசினோம்.

‘டிராகன்’ யார்? - பொதுவா காலேஜ்ல சேர்ந்ததுமே யாராவது ஒரு சீனியர் பற்றி பரபரப்பா எல்லோருமே பேசிட்டு இருப்பாங்க. அவனுக்கு ஃபிரெண்டா இருந்தா கவனிக்கப்படுவோம்னு எல்லோரும் அவன்கூட சுத்துவாங்க. ஆனா, காலேஜை விட்டுட்டு வெளிய வந்தபிறகு அந்த கேரக்டரை யாருமே கண்டுக்க மாட்டாங்க. அவன் வாழ்க்கை என்னாச்சுன்னு கூட யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு சீனியரின் கதைதான் இது. அந்த மாதிரி கேரக்டருக்கு பட்டப் பெயர் இருக்கும். அதுதான் டிராகன்.

பிரதீப் ரங்கநாதன்தான் அந்த டிராகனா? - ஆமா. கல்லூரி சீனியரா வருவார். கல்லூரியும் அதுக்குப் பிறகான வாழ்க்கையும்தான் கதை. ஒருத்தரோட வெற்றி தோல்வி பற்றிப் பேசும் படம் இது. வாழ்க்கையில யாரோ ஒருத்தர்தான் வெற்றி பெறுறாங்க.

அந்த வெற்றிக்காக ஓடிட்டு இருக்கிற மத்தவங்க யாரு? அவங்க என்ன பண்றாங்க அப்படிங்கறதையும் சக்சஸ்னா என்னங்கறதையும் இந்தப் படம் பேசும். நானும் பிரதீப் ரங்கநாதனும் ஒரே கல்லூரியில் படிச்சவங்க. நான் அவருக்கு சீனியர். அதுக்காக இந்தக் கதையில எங்க வாழ்க்கையில நடந்த விஷயத்தை வைக்கல. திரைக்கதை அழகா இருக்கும்.

‘லவ் டுடே’ வெற்றி, பிரதீப் ரங்கநாதன் மேல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு… உண்மைதான். இந்தப் படத்துல என் நண்பன் அப்படிங்கறதைத் தாண்டி, ‘லவ் டுடே’ மூலம் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் கொடுத்த ஹீரோவை எப்படி பயன்படுத்தணுமோ, அப்படித்தான் காண்பிச்சிருக்கோம். எந்த சினிமா பின்புலமும் இல்லாம ஒருத்தர் சினிமாவுக்குள்ள வந்து ஹிட் கொடுக்கிறது சாதாரண விஷயமில்லை.

ரசிகர்களோட எதிர்பார்ப்பை கண்டிப்பா இந்தப் படம் பூர்த்தி செய்யும். படத்துல 2 பைட் இருக்கு. பிரதீப், ஃபைட் பண்ணினா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர்னு இரண்டு ஹீரோயின்கள். அனுபமாவை இதுல டப்பிங் பேச வச்சிருக்கேன்.

பிரதீப்கிட்ட தனுஷ் சாயல் இருக்குன்னு முந்தைய படத்துல சொன்னாங்க... உடல் மொழி தாண்டி, இரண்டு பேருக்கும் இயல்பிலேயே கொஞ்சம் ஒரே சாயல் இருக்கு. இந்தப் படத்துல அந்த மாதிரி எதுவும் இருக்காது. அப்படி எதுவும் தெரியக் கூடாதுன்னு கவனமா பண்ணியிருக்கோம்.

ஒரு பாடலை சிம்பு பாடியிருக்காரே? - லியோன் ஜேம்ஸ் இசை அமைச்சிருக்கார். ‘பிரேக் அப்’ பாடல் பண்ணலாம்னு பேசிட்டிருக்கும்போது, ‘ஹூக் லைன்’ என்ன வைக்கலாம்னு யோசிச்சோம். அப்ப என் டிரைவர் சொன்ன வரி, ‘ஏன்டி விட்டுப் போன’. அதை வச்சு அந்தப் பாடலை முடிச்சோம். இந்தப் பாடலுக்கு சிம்பு குரல் பொருத்தமா இருக்கும்னு நினைச்சு, அவர்கிட்ட கேட்டதும் முதல்ல மறுத்தார். பிறகு பாடறேன்னு சொன்னார். பிறகு அவரே புரமோவுல வந்து நடிச்சது எங்களுக்கு ஆச்சரியம்.

சிம்புவோட 51-வது படத்தை இயக்கபோறீங்க? - என்னோட 2-வது படத்துல அவர் நடிக்க வேண்டியது. கோவிட் வந்ததாலயும் பிறகு நான் ‘ஓ மை கடவுளே’ படத்தோட தெலுங்கு ரீமேக்குக்கு போயிட்டதாலயும் எல்லாமே தள்ளிபோயிருச்சு. அதனால இந்தப் படத்தை ஆரம்பிச்சுட்டேன். அவரோட 51-வதுபடத்துல ஒரு புது உலகம் இருக்கும். அது பேன்டஸி கதை. அவர் திறமையை வெளிப்படுத்தற மாதிரியான விஷயங்கள் அது இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x