Published : 05 Feb 2025 10:22 AM
Last Updated : 05 Feb 2025 10:22 AM
தமிழ் திரையுலகில் முதன்முறையாகக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டைப் பயிற்சி, இசை, கதாநாயகன் உட்பட 21 பொறுப்புகளை ஏற்று குகன் சக்கரவர்த்தியார் உருவாக்கி இருக்கும் படம், ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’.
இதில் ஜெய்ஸ்ரீ, பிரபாத், அலினா ஷேக், வாசு விக்ரம், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாதா பிதா ஃபிலிம் பேக்டரி சார்பில் ராஜலட்சுமி நடராஜன் வழங்கும் படமான இது, மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் 28-ம் தேதி வெளியாகிறது.
படம்பற்றி குகன் சக்கரவர்த்தியார் கூறும்போது “பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகத்தின் உறவினர் நான். டி.ராஜேந்தரின் சிஷ்யன். ஏற்கெனவே சில படங்களில் 2-வது நாயகனாக நடித்திருக்கிறேன். இதில் நாயகனாக நடித்துள்ளேன். நம் மக்களின் அழகான வாழ்வியலுடன் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன், அடித்தட்டில் இருந்து முன்னேறி கோடீஸ்வரனாகிறான். அதைத் தக்க வைக்க சில தவறுகளைச் செய்கிறான்.
பிறகு எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை உணர்வது கதை. அப்துல் கலாமின் கருத்துகளை வலியுறுத்தும் படம் என்பதால், சிறப்புக் காட்சியாக மாணவர்களுக்குத் திரையிட இருக்கிறோம். ஒரு படத்தின் 21 பொறுப்புகளையும் ஏற்று யாரும் படம் உருவாக்கவில்லை. நான் இந்த முயற்சியை எடுத்திருக்கிறேன். இந்தப் படம் தெலுங்கில் ‘பங்காள காதம்லோ’, இந்தியில், ‘பே ஆஃப் பெங்கால்’ ஆகிய பெயர்களில் வெளியாக இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT