Last Updated : 31 Jan, 2025 04:03 PM

 

Published : 31 Jan 2025 04:03 PM
Last Updated : 31 Jan 2025 04:03 PM

‘தளபதி’, ‘மூடுபனி’ பட பாடல்களிலும் சிம்பொனி வடிவம்: இளையராஜா பகிர்வுகள்

தளபதி படத்தின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, மூடுபனி படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’, சிவப்பு ரோஜாக்கள் படத்தின் ‘நினைவோ ஒரு பறவை’ போன்ற பாடல்களில் வரும் பின்னணி இசை ஒரு சிம்பொனி வடிவம்தான் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். ‘தி இந்து’வில் அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து சில பகுதிகள்...

“மேற்கத்திய நாடுகளில் இருந்த சிம்பொனி இசையை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தவே 50 வருடங்களுக்கு முன்னால் என்னுடைய பாடல்களில் பயன்படுத்தினேன். தற்போது அதை எடுத்துக் கொண்டு வந்து நான் காப்பி அடித்துவிட்டேன் என்று கூறுகிறார்கள். நான் இதுபோன்ற இசை எல்லாம் உலகளவில் உள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே என்னுடைய இசைகளில் பயன்படுத்தினேன். நான் கூறவில்லை என்றால், உங்களுக்கு இது பற்றி எல்லாம் தெரிந்திருக்குமா?

‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘நினைவோ ஒரு பறவை’ போன்ற பாடல்களில் வரும் பின்னணி இசை ஒரு சிம்பொனி வடிவம்தான். சிம்பொனி என்பது உலக மாமேதைகள் எழுதி வைத்திருப்பது. அதை நாம் கேட்க வேண்டும் என்றால் பத்து ஜென்மம் நமக்கு தேவைப்படும். நான் இசையமைத்த ஒரு சினிமா பாடல் ஹிட்டடித்து விட்டது என்றால், அதனை முறியடிக்கும் வேறொரு பாடலை நான் தான் அமைக்க வேண்டும். ஆனால் சிம்பொனி இசையை பொறுத்தவரை அவ்வாறு செய்ய இயலாது.

சிம்பொனி என்றால் நான்கு கவிஞர்கள் எழுதும் வெவ்வேறு கவிதையை ஒரே நேரத்தில் இசையாக கொடுப்பது. சிம்பொனியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கர்னாடக இசையில் உள்ள பல்லவி, அனு பல்லவி மற்றும் சரணம் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். சிம்பொனி இசையை வேறு யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் புரியாது. அதை நீங்கள் கேட்டு அனுபவித்தால் மட்டுமே புரியும். சிம்பொனி இசையை அனுபவிக்க அதை பற்றிய அறிவு வேண்டாமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். சிம்பொனி இசை என அல்ல, எதை அனுபவிக்க வேண்டும் என்றாலும் உணர்வுதான் தேவை. உணர்வுதான் அறிவு. எவ்வாறு சினிமா பாடல்களை ரசித்து கேட்கிறீர்களோ, அதைப்போன்று சிம்பொனியை ரசித்துக் கேளுங்கள், உங்களுக்கு நிச்சியம் பிடிக்கும்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது ஆறு சிம்பொனி இசைக்குழுக்கள் இந்தியாவில் இருந்தன. மைசூரில் இருந்த ஓர் இசைக்குழு தசரா அன்று சிம்பொனி இசையை நிகழ்த்த ஒரு வருடம் பயிற்சி எடுப்பார்கள். தற்போது ஓர் இசைக்குழு கூட இல்லை. இதன் காரணமாகவே என்னால் இங்கு சிம்பொனி இசையை இந்தியாவில் பதிவு செய்ய முடியவில்லை” என்றார் இளையராஜா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x