Published : 30 Jan 2025 11:36 PM
Last Updated : 30 Jan 2025 11:36 PM

ஒரிஜினல் ‘பராசக்தி’ டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது - நேஷனல் பிக்சர்ஸ் எச்சரிக்கை

சென்னை: ‘பராசக்தி’ படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டிருப்பதால் அந்த பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடவேண்டும் என்று நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, 1952 வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா பெருமாள் முதலியார் தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.

அந்த படத்தில் சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி மெய்யப்ப செட்டியார் ஆட்சேபனை தெரிவித்தபோதும், பெருமாள் முதலியார்தான் பிடிவாதமாக சிவாஜியையே கதாநாயகனாக நடிக்கவைத்தார். சிவாஜி தன்னுடைய இறுதிக் காலம் வரை, தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற வகையில் ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் வேலூர் வந்து பெருமாள் முதலியாரிடம் ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய, எங்களின் தாத்தாவுடைய பெருமைமிகு தயாரிப்புதான் ‘பராசக்தி’.

பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் நூறாண்டு ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்ற அளவிற்கு, அந்தத் திரைப்படத்தில் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், ‘பராசக்தி’ திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.

இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான ‘பராசக்தி’ திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தை, சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். லீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x