Published : 30 Jan 2025 07:39 PM
Last Updated : 30 Jan 2025 07:39 PM
காதலை வழக்கமாக சொல்லும் பாணியிலிருந்து விலகி வேறு பாணியிலோ, வீரத்தை எப்போதும் தொடர்புபடுத்தப்படும் சமூகத்தில் இருந்து வேறொரு சமூகத்தின் பார்வையிலிருந்தோ பிரதிபலித்து எப்போதெல்லாம் ஒரு கலை வடிவம் உருவாகிறதோ அப்போதெல்லாம் அதனைச் சுற்றி விவாதங்களும், விமர்சனங்களும் சமூகத்தில் எழத்தான் செய்கின்றன.
காரணம்... ‘காதல் இப்படித்தான் இருக்க வேண்டும், வீரம் இதுதான்!’ என்று பொது புத்தியில் காலங்காலமாக கடத்தப்பட்டிருக்கும் கற்பிதங்கள். அவைதான் இத்தகைய விமர்சனங்களையும், விவாதங்களையும் ஊக்குவிக்கின்றன. இது சினிமாவுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களுக்கும், ஏன் ஓவியர்கள், சிற்பிகள் என கலைஞர்கள் பலருக்கும் கூட நேர்வதுதான். அப்படியாக ஒரு டீசரிலேயே விமர்சனக் கணைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர் ‘பேட் கேர்ள்’ (Bad Girl) படத்தின் தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மற்றும் இயக்குநர் வர்ஷா பரத்.
இந்த விமர்சனங்கள் அபாண்டமானவை என்றோ, இந்த விமர்சனங்கள் எல்லாம் அவசியாமனவை என்றோ நான் பேசப்போவதில்லை. மாறாக, கலைப் படைப்புகளை அணுகக் கூடிய வாய்ப்புகளைப் பற்றி பேச விரும்புகிறோம். அந்தப் பேச்சுக்கான பின்னூட்டங்கள் சமூகத்தின் சாட்சியாகக் கூட அமையலாம். வாருங்கள் பேசுவோம். புதுமுக பெண் இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கத்தில் அஞ்சலி சிவராமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஞாயிறு அன்று வெளியானது. ரோட்டர்டாமில் நடக்க உள்ள 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் ஜனவரி 30 தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை திரையிடப்படுகிறது.
இங்கிருந்துதான் இப்படத்துக்கான முதல் விமர்சனமும் உருவாகிறது. “ஓஹோ! சர்வதேச திரைப்பட விழாவுக்காக எடுக்கப்பட்ட படமா? அது இந்திய சமூகங்களை அகஸ்மாத்தாக அசிங்கப்படுத்திவிட்டுச் செல்லும்” என்று வாதிடுகின்றனர். இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். ஆனால், எல்லாப் படங்களும் அப்படியானதாக இருந்துவிடுவதில்லை என்பதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.
டீசர் என்பது வெறும் டீசர் தான். அந்த முன்னோட்டமே முழு படைப்பையும் தீர்மானித்துவிடாது. டீசரில் பெண் உரிமை பேசும் படங்கள் திரையில் திராபையாக இருக்கலாம். எப்போதோ பார்த்த நடிகை ஓவியா நடித்த ‘90ML’ படம் அப்படியொரு அனுபவத்தை எனக்குத் தந்தது. எனவே, டீசரை வைத்துக் கொண்டு மட்டும் ஆதரவாகவோ, எதிராகவோ நிலைப்பாடுகளை எட்ட முயற்சிப்பது அபத்தம்.
ஓப்பனிங்கே..! - டீசரில் நாயகி எடுத்த எடுப்பில், “என் நினைவுக்கு எட்டிய காலத்தில் இருந்தே நான் எனக்கொருரு ஆண் நண்பர் வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன்” எனக் கூறுகிறார். இந்த ஓப்பனிங் தான் பெரும்பாலான விமர்சனங்களை ஈர்த்துள்ளது. இதில் 3 விஷயங்களைப் பற்றி என் பார்வையை சமர்ப்பிக்கிறேன்.
முதலாவதாக, எதிர்பாலின ஈர்ப்பு / தன்பாலின ஈர்ப்பு என்பது பதின்ம வயதில் ஆண் / பெண் / மாற்று பாலினத்தவர் என எல்லோருக்குள்ளும் இயல்பாகவே உருவாகும் உணர்வு தான். மேலும், ஈர்ப்பு உணர்வுகளை பதின்மம், மத்தியமம், முதுமை என்றெல்லாம் சுருக்குவதும் கூட ஒருவகையில் ‘சோஷியல் ஸ்டிக்மா’ தான். எந்த வயதில் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் ஒருவர் மீது ஈர்ப்பு உண்டாகலாம். அது விவாததுக்கான தனித் தலைப்பென்பதால் நாம் டேக் டைவர்ஷன்களைப் புறந்தள்ளி ‘பேட் கேர்ள்’ படத்தை சுற்றி பார்வையை சுருக்குவோம்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல் எதிர்பாலின ஈர்ப்பு / தன்பாலின ஈர்ப்பு என்பது பதின்ம வயதில் ஆண் / பெண் / மாற்று பாலினத்தவர் என எல்லோருக்குள்ளும் இயல்பாகவே உருவாகும். அப்போது தான் பிள்ளைகளுக்கு நாம் நம் உடலைப் பற்றி அறிவியல்பூர்வமான உண்மைகளை உடைத்துப் பேச வேண்டும். பாலின சமத்துவம் பற்றி ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும்.
பாலியல் உணர்வை எப்படிக் கையாள்வது என்று கற்றுக்கொடுப்பதும் சமூகப் பொறுப்பு. ஒருவேளை அந்தக் கற்றலை நோக்கி இந்தப் படம் நகர்ந்துள்ளதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படியான நகர்வு இருந்தால் நிச்சயமாக அந்த அணுகுமுறையில் ஏற்றத்தையும், சறுக்கலையும் பகுப்பாய்வு செய்யலாமே தவிர இப்போதே கடுமையான விமர்சனங்களையும், அப்ளாஸ்களையும் அள்ளித் தெளிக்க வேண்டியதில்லை.
இரண்டாவதாக, சினிமாவின் வீச்சு பெரியது என்பதால் சினிமா மூலம் ஒரு கருத்தைப் பகிரும் போதும் எச்சரிக்கை அவசியமாகிறது. பட புரோமோஷன் விழாவில் இயக்குநர் பேசும்போது, தான் இந்தப் படத்தில் பெண்கள் குடிக்க வேண்டும், தம் அடிக்க வேண்டும் என்பதை நான் ஊக்குவிக்கவில்லை. அதேவேளையில் பெண் என்றால் புனிதர் என்றும், பெண் என்றால் தியாகத்தின் உருவகம் என்றும், பெண் என்றால் தாய்மைக்கானவள் என்றும் அடுக்கடுக்கான பொறுப்புகளை சுமத்தாதீர்கள். பெண்கள் புனிதர்களாக இருக்க வேண்டுமென்பது இல்லை அவர்கள் மனிதர்களாக இருந்தால் போதும் என்பதையே வலியுறுத்து விழைவதாகக் கூறினார்.
உண்மையில் பெண்கள், பெண் பிள்ளைகள் இயல்பாக இருப்பதை அனுமதிக்க வேண்டும் என்பதை விட அந்த இயல்பை ஏற்றுக் கொள்ள சமூகம் பழகிக் கொள்ள வேண்டும். பெண் வெறுப்பை சமூகத்திலிருந்து அகற்றும் படமாக, அதுவும் பிரச்சார நெடியில்லாமல் இயல்பாக கடத்தும் படமாக இருக்குமேயானால் வரவேற்கலாம். அதைப் பற்றி விவாதிக்கலாம்.
மூன்றாவதாக, ‘பேட்-கேர்ள்’ படத்தில் அந்த நாயகி பிராமண சமூகப் பின்னணியில் இருப்பதை டீசர் வெளிப்படையாகவே புலப்படுத்துகிறது. சமூகத்துக்கு ஒரு மிகப் பெரிய கருத்தை சொல்ல விரும்பும்போது, அதுவும் உணர்வுநுட்பம் மிக்க கருப்பொருள் கொண்ட கதைக்களத்தை படைக்கும் போது கூடுதல் கவனம் தேவை. இங்கே ஒரு பெண் பிள்ளையின் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை, ஏக்கங்களை, தேடல்களைப் பற்றிப் பேசும்போது ஏற்கெனவே சமூகத்தில் பெரும் சுமையாக இருக்கும் சாதிய, மத அடையாளங்களைப் புறந்தள்ளி படைக்கலாம். சில கதைகளில், சில கலைகளில் அத்தகைய குறிப்புகள் அவசியமாக இருக்கலாம். அத்தகைய சூழலில் அதை வெளிப்படுத்தலாம். ஒருவேளை அப்படி ஒரு தேவை இல்லாமல் திணித்தால் அது இலக்கை தாண்டி வேறு விமர்சனங்களையும், மோதல்களையும் மட்டுமே ஊக்குவிக்கும்.
ஆக, ஒரு படைப்பை அதன் முழு உருவத்தையும் வைத்தே விமர்சிக்க முடியுமே தவிர அதன் முகத்தை, முன்னுரையை, அதன் அட்டைப் படத்தை, அதன் டீசர், ட்ரெய்லரை வைத்து கணித்துவிட முடியாது. படைப்புகளை அணுக பரந்த மனம் வேண்டும். அப்போதுதான் பாராட்டுகளும், எதிர்வினைகளும் அதற்கான அந்தஸ்தைப் பெறும்.
சிந்தனையைத் தூண்ட வேண்டும்... - இதைத்தான் படத்தில் நடித்த நடிகை சாந்தி ப்ரியாவும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது பக்கத்தில், “பேட் கேர்ள் படம் ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றி பேசவில்லை. மாறாக, சமூகத்தின் சில முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறது. இத்தகைய படங்கள் சிந்தனையைத் தூண்ட வேண்டும், விவாதங்களை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே இது ஆபத்தானது, கீழ்த்தரமானது என்று முடிவுகட்டக் கூடாது.
கலை என்பது கருத்தைக் கூறும் ஊடகம். சினிமா எப்போதுமே சமூகத்தின் சிக்கல்களை பிரதிபலிக்கிறது. உறவுச் சிக்கல்களையும், அடையாளச் சிக்கல்களையும் பேசியிருக்கிறது, பேசுகிறது. பேட் கேர்ள் போன்ற படங்கள் சமூக பொதுபுத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உடைக்க உதவும். இதுவரை பேசப்படாத விஷயங்கள் மீது புத்தொளி பாய்ச்சும்.
இந்தப் படத்தில் ஒரு பிராமணப் பெண்ணை சுற்றி கதையை கட்டமைத்துள்ளது அந்தக் குறிப்பிட்ட சமூகத்தை விமர்சனத்துக்குள்ளாக்குவது அல்ல, மாறாக நம்பகத்தன்மை மிக்க கதாபாத்திரங்களை, நிஜத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை, அப்படியே பக்குவப்படுத்தாமல் அதே இயல்பில் கதைக்கு தேவையானபடி சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். அவர் அந்தப் படத்தில் பணியாற்றி இருப்பதால் இந்த நிலைப்பாட்டை எடுத்தாரா என்பதும் கூட படம் வெளியானால் மட்டுமே தெரியும்.
எனவே, கலைப் படைப்புகளை அணுகக் கூடிய வாய்ப்புகளை விசாலமாக்கிக் கொள்வது நாகரிக சமூகத்தின் முக்கிய அந்தஸ்தாக இருக்க முடியும். மேலும், இதுபோன்ற படங்கள் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியனவற்றை ஊக்குவிப்பதாக அமைந்துவிடக் கூடாது. இந்த வஸ்துக்களை எந்த பாலினம் பயன்படுத்தினாலும் சேதாரம் சமமானதே.
அதேபோல் பாலியல் உணர்வுகள் மீதான விழிப்புணர்வை பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லும் போது டீன் பிரெக்னென்சி, பாலியல் நோய்கள் போன்ற பக்கவாட்டு விளைவுகளைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். உடல் அறிவியல் மூலம் உடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதைவிடுத்து பொத்தாம் பொதுவாக பிடித்த மாதிரியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஊக்குவித்தால் அது இன்னும் பிற சமூகப் பிரச்சினையையே உருவாக்கும். > வாசிக்க: சர்ச்சையை கிளப்பிய ‘பேட் கேர்ள்’ டீசர்: மோகன் ஜி எதிர்வினையும், விவாதமும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT