Published : 27 Jan 2025 09:00 AM
Last Updated : 27 Jan 2025 09:00 AM
காதலி வெண்ணிலாவை (சான்வே மேகனா) சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கிறார், நவீன் (மணிகண்டன்). எதிர்ப்பு இருந்தாலும், நவீன் வீட்டிலேயே இருவருடைய வாழ்க்கையும் தொடங்குகிறது. தன்னை கேவலமாக நினைக்கும் அக்கா கணவர் ராஜேந்திரன் (குரு சோமசுந்தரம்) முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கும் நவீனுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலையால் திடீரென வேலை பறி போகிறது. என்றாலும், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் அவர், கடன் வாங்கி குவிக்கிறார். அது அவரை எங்கு கொண்டு நிறுத்துகிறது என்பதை கலகலப்பாகச் சொல்கிறது படம்.
குடும்பக் கதைகள் அருகி வரும் வேளையில், இந்தக் காலத்துக்கேற்ற கதையை இயக்கியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமியை பாராட்டலாம். வழக்கமான குடும்பக் கதைதான் என்றாலும் அந்தக் குடும்பத்தின் ஓட்டத்துக்காக நாயகன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை ஏராள நகைச்சுவையுடன் தாராளமாகக் கொடுத்திருக்கும் திரைக்கதைதான் படத்தின் ஆகப் பெரும் பலம். அதை எழுதியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமிக்கும் பிரசன்னா பாலச்சந்திரனுக்கும் கொடுக்கலாம் பூச்செண்டு.
மனைவி, அம்மா, அப்பாவின் தேவைக்காகப் பணம் தேடி ஓடுவது, குடும்பப் பாரம் சுமக்க முடியாமல் திண்டாடுவது, அதற்காகத் தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முறுக்கிக் கொண்டு நிற்பது என ஓர் எளிய இளைஞனை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். ‘லோன் ஆப்’ மூலம் வாங்கிய கடனை அடைக்க, மேலும் மேலும் கடன் வாங்கி நாயகன் படும் அவஸ்தையை நகைச்சுவையாகச் சொல்லியிருந்தாலும் அவை சிந்திக்கத் தூண்டும் யதார்த்தம். வழக்கமான சாதி மறுப்பு படங்களில் ஆண் இலக்காக இருப்பதற்கு மாறாக, பெண்ணை நிறுத்தியிருப்பது, இயக்குநரின் மாறுபட்ட சிந்தனை.
வேலை பறிபோனதை வீட்டில் சொல்லாமல் நாயகன் ஏமாற்றுவதும் அதைக் கண்டுபிடிக்கும் அக்கா கணவர், அது ஏதோ உலக மகா குற்றம் போல் சீரியஸ் ஆக்குவதும் என்ன லாஜிக்கோ? முதல் முறையாக நாயகன் கடன் வாங்க நேர்வதில் நியாயமான காட்சிகள் இல்லை. படத்தில் வரும் பேக்கரி தொடர்பான நீண்ட காட்சிகள் சோர்வடைய செய்கின்றன. ஆனால், மணிகண்டனின் நடிப்பும், திரைக்கதையாக்கமும் அவற்றை நேர் செய்துவிடுகிறது. வாழ்க்கையில் பணம்தான் பிரதானம்; மனித மனங்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ மதிப்பில்லை என்பதைச் சொல்லும் இடத்தில் அள்ளுகிறது கைத்தட்டல்.
நவீன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார், மணிகண்டன். நடிப்பிலும் மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு ஊர்க்காரர் போல மாற்றி மாற்றிப் பேசி கடன் வாங்கும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார். சமீப காலமாக அவரின் கதை தேர்வும் நடிப்பும் ரசிக்க வைக்கின்றன. வெல்டன் மணிகண்டன்!
நாயகியாக சான்வே மேகனா, காதல் மனைவியாக அழகாக நடித்திருக்கிறார். குரு சோமசுந்தரம், சீனா செல்லும் ஆசையில் பண்ணும் ரகளைகளில் தியேட்டரில் வெடி சிரிப்பு. மணிகண்டனின் அப்பாவாக ஆர். சுந்தர்ராஜன், சகோதரியாக வரும் நிவேதிதா ராஜப்பன், பாலாஜி சக்திவேல், ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் உள்ளிட்ட நக்கலைட்ஸ் டீம், நவீனின் அம்மா கதாபாத்திரத்தில் வருபவர் எனப் பலரும் படத்துக்குப் போதுமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
வைஷாக்கின் பின்னணி இசையில் குறையில்லை. சுஜித் என். சுப்பிரமணியன் கதைக்குத் தேவையான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார். படத்தொகுப்பாளர் கண்ணன் பாலு நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். கொஞ்சம் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரசிக்க வைக்கிறார் இந்த ‘குடும்பஸ்தன்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT