Last Updated : 26 Jan, 2025 03:39 PM

1  

Published : 26 Jan 2025 03:39 PM
Last Updated : 26 Jan 2025 03:39 PM

“மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன்...” - மிஷ்கின் விவரித்த ‘தன்னிலை’

‘பாட்டல் ராதா’ மேடையில் பேசியது குறித்து மன்னிப்புக் கேட்டது மட்டுமன்றி தன் தரப்பு நியாயங்களையும் எடுத்துரைத்தார் இயக்குநர் மிஷ்கின்.

‘பாட்டல் ராதா’ மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேசியது, பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. திரையுலகினர் பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்ராய் வழங்கும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மிஷ்கின், டாப்ஸி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

இந்த விழாவில் ‘பேட் கேர்ள்’ படம் உருவானது குறித்து முழுமையாக பேசிவிட்டு வெற்றிமாறன், “‘பாட்டல் ராதா’ மேடைக்கு பிறகு இந்த மேடைக்கு தான் மிஷ்கின் வந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நானும் அமீரும் நீண்ட நேரம் பேசினோம். மிஷ்கினிடம் பேசும் போது “Points Noted Vetri” என்றார்.

ஒரு நிகழ்வு நடக்கும் போது அதை உடனே சரி செய்து கொள்ளும் நிலை மிஷ்கினுக்கு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். மற்றவர்கள் வருத்தப்படும் போது அதற்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்பது முக்கியமானதாக பார்க்கிறேன்.” என்று தெரிவித்தார்.

மிஷ்கின் பேசும்போது, ‘பேட் கேர்ள்’ பற்றி பேசிவிட்டு, “அனைவரும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்கள் என்று தொடங்கினார். அதன் பின், “முதல் ஆளாக பாடலாசிரியர் தாமரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னைப் பற்றிய விமர்சனத்தில் வெற்றி பெற்றுவிட்டதால் இப்படி பேசுகிறேன் என்று கூறியிருந்தார். வெற்றி என் மீது தலை மீதிருந்தால் பெரிய ஆட்களுடன் படம் செய்திருக்க வேண்டும். அதனால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் இயக்குநர் லெனின் பாரதி விமர்சித்திருந்தார். தத்துவ ரீதியாக விமர்சித்திருந்தார். அவரிடமும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். என்னை திட்டி நடிகர் அருள்தாஸ் பிரபலமாகவே ஆகிவிட்டார். அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தயாரிப்பாளர் தாணுவிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன்.

என் மீது செருப்பை எறிய வேண்டும் என்று கூறிய நண்பரிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அன்று மேடையில் இருந்த வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் சிரித்தார்கள் என்று பலரும் திட்டினார்கள். ஜோக்காக பேசியது, இரண்டு மூன்று வார்த்தை மேலே போய்விட்டது அவ்வளவே. மனதில் இருந்து பேசியதால் அப்படி ஆகிவிட்டது என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பற்றி விஷால் மோசமாக பேசும் போது கூட, மேடையில் விஷாலைப் பற்றி பேசும் போது கூட வசை வார்த்தைகளால் பேசவில்லை.

ஒரு படத்தின் மேடையில் அதைப் பற்றி பேசும் போது, என் மனதில் ஆழத்தில் இருந்து தான் பேசுவேன். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு படம் வந்தது. அதைப் பற்றி யாரேனும் விமர்சனம் செய்தார்களா? என்னைப் பற்றி தெரிய வேண்டுமென்றால் என் படங்கள் பார்த்தால் போதும். என் படங்கள் சமூக கருத்துகள் சொல்லவில்லையா? அதில் பேரன்பு இல்லையா?. கமல் சாரிடம் போய்விட்டு திரும்ப வந்துவிட்டேன். ரஜினி சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. நான் செல்லவில்லை.

மனிதர்களையும், பிராணிகளையும் நேசிப்பவன் நான். சினிமாவையும், சினிமா மேடையையும் நேசித்துக் கொண்டே இருக்கிறவன். அதைத் தாண்டி வேறு வேலையே இல்லை. ஒவ்வொரு தருணத்திலும் துரோகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். எப்படி என்னால் சக மனிதனைப் பார்த்து அவ்வாறு பேச முடியும்.

ஒரு விழாவில் பேசியதாவது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று விரும்பினேன். என்னிடம் 40 ஆண்டுகளுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் இருக்கிறது. அவ்வளவு மனிதர்கள் நேசிக்க வேண்டியது இருக்கிறது, நிறைய ஊர்களுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களை கடவுள் ஆக்குகிறேன்” என்று மிஷ்கின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x