Last Updated : 21 Jan, 2025 08:52 PM

 

Published : 21 Jan 2025 08:52 PM
Last Updated : 21 Jan 2025 08:52 PM

‘காதல் கோட்டை’ கமலி முதல் குறும்பட விருது வரை: நடிகை தேவயானி மனம் திறந்த பகிர்வுகள்

நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம், ‘கைக்குட்டை ராணி’. 20 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது. தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக இப்படம் வெளிப்படுத்துகிறது. இக்குறும்படம், 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்துக்கான விருதை வென்றுள்ளது.

இந்தக் குறும்படம் குறித்து நடிகை தேவயானியிடம் வாழ்த்துகளோடு பேசினோம். இந்த விருதை உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கும் அவர், ‘காதல் கோட்டை’ கமலி முதல் பெற்றோர்களுக்கான குழந்தைகள் வளர்ப்பு வரை மகிழ்ச்சியாகப் பகிர்கிறார்.

‘கைக்குட்டை ராணி’ குறும்படத்துக்கான விருது குறித்து...

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 30 வருடங்களாக இந்த திரைத் துறையில் நடிகையாக இருக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இதுவரை நான் கலந்துகொண்ட எந்தப் படங்களும் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றதில்லை. ஆனால், முதல்முறையாக நானே தயாரித்து இயக்கிய இந்தக் குறும்படம், ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுக்காக தேர்வானதை நினைக்கும்போது ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

இந்த கதையினை எப்படி தேர்வு செய்தீர்கள்?

இது என்னோட சொந்த வாழ்வில் நடந்ததுதான். அதைத்தான் கதையாக தேர்வு செய்துள்ளேன். குறிப்பாக ஒரு அப்பா, மகள் உணர்வுகளின் பிரதிபலிப்பை மைய கருவாக எடுத்துக்கொண்டேன்.

விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

ஒரு திரைப்படத்தை விருதுக்காக அனுப்பி வைப்பதே நமக்கு விருது கிடைக்க வேண்டும் எண்ணம்தானே. படத்தை முழுவதும் முடித்துவிட்டு, நாங்கள் ப்ரிவியூ பார்த்தபோது, படம் நம்மை ஒருவகையான உணர்வுக்குள் இழுத்து சென்றதை உணர்ந்தேன். அந்த உணர்வுகள் ஓர் அழகான கவிதையாக தெரிந்தது. எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது என்பதை யூகிக்கும் முன்பே முடிந்துவிடும் படம், அது ஓர் அழகான குட்டிக் கவிதை.

மேலும், இந்த குறும்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவு செய்துள்ள இக்குறும்படத்துக்கு பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார். லெட்சுமி நாராயணனின் ஆடியோ மிக்ஸிங்கில் சேதுவின் எபெக்ட்ஸ் சிறப்பு செய்திருக்கிறது. நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிஹாரிகா நடிப்பு ஆக ரகம். ஆக, இந்தக் குறும்படத்தில் பெரிய பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள். எனவே, நிச்சயம் ஏதாவது ஒரு பிரிவில் படத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது எனக்கு கூடுதல் நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை தற்போது நிறைவேறியிருக்கிறது.

இயக்குநராக நீங்கள் எதிர்பார்த்த உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியே கொண்டுவருவதில் ஏதேனும் சிரமங்களைச் சந்தித்தீர்களா?

நிச்சயமாக இல்லை. நாங்க ரொம்ப ஜாலியாக படப்பிடிப்புத் தளத்தினைக் கொண்டு சென்றோம். ஆனால், ஒரு நடிகையாக திறம்பட நடித்தாலும், படத்தினை இயக்குவதில் சொதப்பிவிட்டு கமெண்டுகளுக்கு ஆளாகிவிடக் கூடாதே, எப்படி வேலை வாங்குவோம் என்பன உள்ளிட்ட பயம் உள்ளுக்குள் எனக்கு இருக்கவே செய்தது. ஆனால், ஷூட்டிங் ஆரம்பித்ததுமே, என்னையறியாமல், நான் வேறு விதமாக அவதாரம் எடுத்துவிட்டேன். குழந்தையிடம் சென்றால் நானே குழந்தையாக மாறி அந்த குழந்தையிடம் இருந்து வேலையை அழகாக வாங்கி விடுவேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மழை போன்ற காரணங்களை முன்னிட்டு, இரண்டே நாட்களில் குறும்படத்தை மிக அழகாக எடுத்து முடித்துவிட்டேன்.

இதையெல்லாம் அமைதியாக கூடவே இருந்து கவனித்து வந்திருந்திருக்கிறார்கள் என்னுடைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பாரி வள்ளலும், காஸ்ட்யூம் டிஸைனர் மாசானமும். என்ன மேடம் இப்படி எல்லோரையும் பம்பரமாக வேலை வாங்குகிறீர்கள் என்று ஷாக் ஆகி என்னிடம் கேட்டே விட்டார்கள். இவங்க இரண்டு பேரும் ‘காதல் கோட்டை’யில் இருந்து எல்லா படங்களிலும் என்னுடன் வேலை பார்த்து வருபவர்கள். அவர்கள் என்னைப் பார்த்து அப்படி கூறியது ‘நம்முடைய வேலையை நாம சரியாகத்தான் செய்திருக்கிறோம்’ என்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.

‘காதல் கோட்டை’, ‘சூர்யவம்சம்’, ‘நினைத்தேன் வந்தாய்’ ஆகிய படங்களின் கதாபாத்திரங்களின் நாயகிகளில் யாரைப் பெரிதாக நீங்கள் கொண்டாடுவீர்கள்?

நான் கட்டாயம் ‘காதல் கோட்டை’ கமலியைத்தான் கொண்டாடுவேன். கமலி இல்லையென்றால் இன்று நான் இல்லை. நீங்கள் இப்போது என்னிடம் இந்தப் பேட்டி எடுத்திருக்க மாட்டீர்கள் என்பதை நிச்சயம் நம்புகிறேன்.

தமிழக அரசியல் களத்தை கவனிக்கிறீர்களா?

விஜய் சாருக்கு வாழ்த்துகள்! அவரின் இந்த அரசியல் பயணமும் திரைத்துறையைப் போல வெற்றி கொடுக்கட்டும், சிறக்கட்டும். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அது அவரின் பலம். அதன்மூலம் தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன என்பதை இப்போதே என்னால் உறுதியாக கூற முடியாது. நானும் உங்களைப்போல இதனை ஒரு கேள்வியாக முன்வைத்து காத்திருக்கிறேன்.

இளம் பெற்றோருக்கு உங்கள் அட்வைஸ்?

முக்கியமாக நான் எனது குழந்தைகளுக்கு ஸ்வீட் அம்மா, கோபக்கார அம்மா, பாசக்கார அம்மான்னு பல ரூபங்கள் எடுத்துவிடுவேன். எது முக்கியம் என்பதை நாம தீர்மானிக்கும் காலம் வரை நாமதான் தீர்மானிக்க வேண்டும். அதில் சமரசம் கூடாது என்று நினைக்கிறேன். மேலும் முக்கியமாக இந்த கால குழந்தைகளின் பாதையை மாற்றுவதில் மொபைல் போன் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது இடங்களில் நிறைய பெற்றோர்கள், குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுத்தால் மட்டுமே அவர்களைச் சமாளிக்க முடியும் என்கிற சூழலைத்தான் எதிர்கொள்கிறார்கள்.

இதனை என்னுடைய தம்பி நகுலும், அவரது மனைவி ஸ்ருதியும், மிக அழகாக பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு இப்பொழுதும் மொபைல் போனை கொடுப்பதில்லை. டிவி பார்க்க கூட கொஞ்சமான நேரம் மட்டுமே கொடுக்கிறார்கள். அழகாக விளையாட வைக்கிறார்கள். குழந்தைகளிடமும் எந்த சொந்த காரணத்தைக் கொண்டும் தங்கள் கோபத்தை கடத்துவதில்லை. மிக அழகாக குழந்தைபோலவே அவர்களும் அவர்களிடம் பொறுமையாக பேசுகிறார்கள்.

அந்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் வளர்க்கும் விதம், சேட்டை பண்ணும்போது கூட திட்டாமல், எரிச்சல் படாமல் மிகவும் அழகாக கையாளுகிறார்கள். இது எனக்கு அவர்கள் மீது ஒரு மதிப்பை அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து அவர்களிடம் நான் நேரடியாகவே சொல்லி பெருமைப் பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த அளவில் இந்த சிறுவயதில் இருந்தே குழந்தைகளை சரியாக கையாண்டுவிட்டால் அவர்களின் எதிர்காலம் சிறக்கும் என்று நினைக்கிறேன்.

2கே கிட்ஸ்களுக்கு பள்ளியிலும் சரி, வெளியிடங்களிலும் சரி என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பெற்றோர்களிடம் எதுவும் மறைக்காமல் சொல்ல பழக வேண்டும். பெற்றோர்களும் இந்த வயதில் அவர்களுக்கு ஒரு அழகான நண்பர்களாக தங்களை மாற்றி கொள்வதின் மூலம் நிறைய டீன்ஏஜ் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

நீங்கள் எதை மிஸ் செய்கிறீர்கள்?

என்னுடைய ஆசிரியர் பணியை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அந்தப் பணி மிகவும் அழகானது மட்டுமல்ல; ஆத்மார்த்தமானதும் கூட.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x