Last Updated : 21 Jan, 2025 03:17 PM

1  

Published : 21 Jan 2025 03:17 PM
Last Updated : 21 Jan 2025 03:17 PM

‘லியோ’ படத்துக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை: வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ‘லியோ’ படத்துக்கு தடை விதிக்க கோரி தக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையை சேர்ந்த ராஜமுருகன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் கடந்த 2024 அக்டோபர் 19-ம் தேதி வெளியானது. இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளது. துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பது பற்றியும் காட்சிகள் உள்ளன.

பல்வேறு மத சின்னங்களை பயன்படுத்தி மதம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களையும், எதிரிகளை பழிவாங்க பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் பார்க்க தகுதியற்ற காட்சிகளும் அதிகம் உள்ளது.இவற்றை பார்க்கும் இளம் சிறார்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும், மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்.

எனவே ‘லியோ’ திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ‘லியோ’ திரைப்படக்குழு மீது வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களின் படி உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும், ‘லியோ’ படத்தை முற்றிலும் தடை விதித்தும் உத்தரவிடவேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ. டி. மரிய கிளாட் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ‘லியோ’ பட குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. விளம்பர நோக்கோடு இந்த தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடபட்டது. பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x