Published : 19 Jan 2025 07:50 PM
Last Updated : 19 Jan 2025 07:50 PM
மது குடிக்கும் பழக்கம், மதுப் பழக்கத்துக்கு அடிமையாதல் உள்ளிட்டவற்றுடன் இளையராஜா குறித்த இயக்குநர் மிஷ்கினின் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.இரஞ்சித் மற்றும் அருண்பாலாஜி தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குசாமி, அமீர் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “அமீரையும், வெற்றிமாறனையும் தவிர இங்கு மேடையில் இருக்கும் அனைவருமே குடிகாரர்கள்தான். தமிழ் சினிமாவில் அதிமாக குடித்தவனும், குடித்துக் கொண்டிருப்பவனும், குடிக்க போறவனும் நானே. இப்படம் போதையை பற்றி பேசுகிறது. ஆனால், நான் அப்படி பார்க்கவில்லை. இதன் இயக்குநர் தினகரை ஒரு அற்புதமான எழுத்தாளராக பார்த்தேன்.
மனிதம் தோன்றியதில் இருந்து குடி இருக்கிறது. இந்த சமூகத்தில் காரித் துப்பும் எச்சில் போலதான் குடியை பார்க்கிறது.
தமிழ்நாட்டின் ஆதியில் இருந்து குடியானது இருக்கிறது. எனக்கு அதைப் பற்றி அனைத்தும் தெரியும். சாராயமே காய்ச்சும் அளவுக்கு தொழில்நுட்பம் தெரியும். நானும் மதுவை விரும்பி குடிப்பேன். ஆனால், ஒரு நாள் கூட மது என்னை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது கிடையாது.
உதவி இயக்குநராக இருந்தபொழுது குவாட்டர் வாங்கதான் பணம் இருக்கும். அத்துடன் இரண்டு கொசுவத்திகளையும் கொண்டு செல்வேன். ஏனென்றால் குடித்துக் கொண்டே சினிமா பற்றி பேச ஆரம்பித்துவிடுவோம். அப்படி பேசும்போது ஒரு கட்டத்தில் பாட ஆரம்பித்துவிடுவேன். எங்கிருந்தாவது எனக்கு ஒரு குவார்ட்டர் வந்துவிடும்.
குடிக்கு அடிமையானவர்கள் பலரும் நல்ல மனிதர்களாகவே இருப்பார்கள். இன்று எது தான் நம்மை அடிமையாக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் அநாகரிகமான பாடலுக்கு உதட்டை கடித்துக் கொண்டு நடனமாடுகிறார்கள். இன்னும் சில நாட்களில் ஐபிஎல் வந்துவிடும். நாம் அனைவரும் வாயை பிளந்துக் கொண்டு பார்ப்போம். தோனி கடைசி வரை ஓய்வு எடுக்கப் போவதே இல்லை. இப்படி அடிமையாவதில் பல விஷயங்கள் இருக்கிறது.
மன வருத்தம் அதிகமுள்ளவர்கள் தான் மது அருந்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அடிமையாகிவிடுகிறார்கள். நானும் பெரும் குடிகாரன் தான். ஆனால், வாழ்க்கையின் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு அதைவிட பெரிய போதை இருக்கிறது. அது சினிமா. இயக்குநர் குரோசவா ஒரு பெரிய போதை. அதைவிட இளையராஜானு ஒருத்தர் இருக்கார். அவர் மிகப் பெரிய போதை. அவருடைய பாடல்கள் தான் எங்களுக்கு எல்லாம் சைட் டிஷ். மனிதர்களை அதிக குடிகாரர்கள் ஆக்கியதும் அவர்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சை உருவாக்கி இருக்கிறது. பலரும் இந்த வீடியோ பதிவினை பகிர்ந்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT