Published : 19 Jan 2025 12:02 AM
Last Updated : 19 Jan 2025 12:02 AM
‘மதகஜராஜா’ வெளியீட்டுக்கு பெரும் முயற்சி எடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த ‘மதகஜராஜா’ திரைப்படம், தற்போது வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் தமிழகத்தில் ஒட்டுமொத்த வசூலில் 50 கோடியைத் தாண்டும் என்று விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள். இப்படம் சிக்கலில் இருக்கும் போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இப்போது தான் வெளியாகி இருக்கிறது. ‘மதகஜராஜா’ வெற்றியால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தற்போது ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கேயார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், மனோபாலா, அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான ‘மதகஜராஜா’ படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது இயக்குநர் சுந்தர்.சி, விஷால், ஏசி சண்முகம், திருப்பூர் சுப்ரமணியம், ஜெமினி பிலிம்ஸ் உள்ளிட்டவர்களின் சீரிய முயற்சியால் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது.
படத்தை தயாரித்தவர்கள், விநியோகித்தவர்கள், திரையிட்டவர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதிலும் மகிழ்ச்சியை பொங்க வைத்திருக்கிறது ‘மதகஜராஜா’. படம் எடுக்கப்பட்டு தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டால் அந்த படம் ஓடாது என்ற வறட்டு வாதத்தை அடித்து நொறுக்கி இருக்கிறது இந்த பிளாக்பஸ்டர் வெற்றி. சினிமாவை நேசிக்கும் எல்லோருக்கும் இது மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்திருக்கிறது.
ஏனென்றால் நல்ல படங்களை எடுத்தால் அதன் வெற்றியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் தடுத்துவிட முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம். சினிமா ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரு முயற்சி எடுத்த அத்தனை பேருக்கும் பாராட்டு விழா நடத்தியே தீர வேண்டும். சினிமாவில் வந்தோம் ஜெயித்தோம் சம்பாதித்தோம் என்று ஒதுங்கி விடாமல் இதுபோன்ற நல்ல படங்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது அதை தீர்ப்பதற்கு தோள் கொடுப்பவர்கள் தான் உண்மையான சினிமாக்காரர்களாக இருக்க முடியும். சங்கங்கள் முன்னின்று செய்ய வேண்டியதை சிலர் நல்ல மனசுடன் ஒன்றுகூடி சாதித்துக் காட்டியிருப்பதை மனமுவந்து பாராட்டுகிறேன்.
ஒரு மகாமகம் போல கொண்டாடப்பட வேண்டிய இந்த வெற்றி, தமிழ் திரைப்பட துறையினரை உற்சாகப்படுத்தி இருப்பதுடன் தமிழ் சினிமா தலைநிமிரப் போவதற்கான ஒரு அறிகுறியாகவும் அமைந்துள்ளது. நேர்மையாக உழைத்தால் தோல்வியில்லை என்பதை உணர்த்தும் ‘மதகஜராஜா’, ரசிகர்களின் ரசனை மாறிவிட்டதாக தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது. மக்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் எடுக்கப்படும் படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
இதேபோல் இன்னும் எத்தனையோ நல்ல படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதில் பல நூறு கோடி பணமும் முடங்கி போயிருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் திரைக்கு வந்து அதில் சிறந்த படங்கள் வெற்றி பெற்றால் அதன் மூலம் பல திறமையான கலைஞர்கள் அடையாளம் காணப்படுவார்கள். சினிமா தொழில் சிறப்படையும். எனவே திரைப்பட துறையில் இயங்கி வரும் சங்கங்கள் இனிமேலாவது இது போன்ற முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT