Last Updated : 17 Jan, 2025 09:26 PM

 

Published : 17 Jan 2025 09:26 PM
Last Updated : 17 Jan 2025 09:26 PM

“நான் இத்தனை ஹிட் கொடுத்தும்...” - ‘மதகஜராஜா’ நிகழ்வில் சுந்தர்.சி ஆதங்கம்

“இத்தனை ஹிட் கொடுத்தும் ‘நல்ல இயக்குநர்கள்’ என்ற பட்டியலில் என் பெயர் இருக்காது. எனக்கான பெரிய பாராட்டுகள் இருக்காது” என்று ‘மதகஜராஜா’ வெற்றி விழா நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி உருக்கமாக பேசினார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படம்தான் ‘மதகஜராஜா’. இப்படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் பல பிரச்சினைகளில் சிக்கியதால் ரிலீஸில் முடக்கம் நீடித்தது. பல தடைகளைக் கடந்து, 12 ஆண்டுகள் கழித்து இப்படம் ஜனவரி 10-ல் வெளியானது.

ப்ரோமோஷன்களுக்கான செலவினம் உள்பட ரூ.15 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான ‘மதகஜராஜா’ படம் வெளியான முதல் 6 நாட்களில் மட்டும் ரூ.30 கோடி அளவில் வசூலை எட்டி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

இந்த நிலையில், ‘மதகஜராஜா’ சக்சஸ் மீட்டில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “பன்னிரண்டு ஆண்டுக்குப் பிறகு ‘மதகஜராஜா’ படம் தியேட்டருக்கு வந்துள்ளது. ‘இவ்வளவு நாள் ஆச்சு. என்ன பெரிசா சாதிச்சிட போகுது?’ என்று பலரும் பேசினார்கள். ஆனால், இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மிகவும் பெரிய விஷயம்.

கமர்ஷியல் படங்கள் பெரிய வெற்றி அடையும். அவற்றை ரசிகர்கள் ரசிப்பார்கள். கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வருவார்கள். ஆனால், என் விஷயத்தில், உள்ளுக்குள் சின்னதாக வருத்தம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும், தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் படங்களையும் கொடுத்து வரும் என்னுடைய பெயர், ‘நல்ல இயக்குநர்’ என்ற பட்டியலில் வராதது வருத்தம். இத்தனை ஹிட் கொடுத்தும் ‘நல்ல இயக்குநர்கள்’ என்ற பட்டியலில் என் பெயர் இருக்காது. எனக்கான பெரிய பாராட்டுகள் இருக்காது.

விஷால் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அதை வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. இந்த வெற்றி, விஷாலின் உழைப்புக்கு சமர்ப்பணம். இவ்வளவு நாளுக்குப் பிறகும் இவ்வளவு வரவேற்புக் கிடைத்திருப்பது எனக்கும் பெரும் மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னதான் கமர்ஷியல் படங்கள் என்ற டேக் இருந்தாலும், முப்பது வருடங்களாக மக்கள் ஆதரவுடன் இதுவரை இருக்கிறேன். மனதுக்குள் இன்னும் சின்ன வருத்தம் இருக்கிறது. எனக்கு உரிய இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படாமல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதுதான் எனது கொள்கை” என்றார் சுந்தர்.சி. இந்தச் சந்திப்பில் நடிகர் விஷால் பேசியது > “இப்போது அது நிஜமாகிவிட்டது!” - ‘மதகஜராஜா’ நிகழ்வில் விஷால் உருக்கம்

முழுக்க முழுக்க சுந்தர்.சி பாணி காமெடியில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ படத்துக்கு மென்மேலும் வரவேற்பு கிடைப்பதால், இன்னும் சில நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டிவிடும் என்று திரை வர்த்தக நிபுணர்கள் கணித்திருப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x