Published : 15 Jan 2025 10:19 PM
Last Updated : 15 Jan 2025 10:19 PM
ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கல் வெளியீடாக புதன்கிழமை (ஜன.14) வெளியானது.
‘ஜென் Z’ எனப்படும் இளம் தலைமுறையை ஈர்ப்பதற்கான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. படத்தில் தமிழ் சினிமாவுக்கு புதிதான பல ‘புதுமைகள்’ இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழில் இதுவரை யாரும் தொடாத ‘Gay Parenting’ குறித்து துணிச்சலாக பேசியிருப்பது பாராட்டப்படுகிறது. விந்து தானம், தன்பாலின திருமணம் போன்ற விஷயங்களை துணிச்சலுடன் பேசியுள்ளது. எனினும், திரைக்கதை ஆக்கத்தால் கலவையான விமர்சனங்க்ளை ‘காதலிக்க நேரமில்லை’ படம் எதிர்கொண்டுள்ளது.
ப்ரோமோஷன் உள்ளிட்ட செலவினத்துடன் ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படும் ‘காதலிக்க நேரமில்லை’ படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் ரூ.2.5 கோடி அளவிலும், அதுவே உலக அளவில் ரூ.3 கோடி அளவில் வசூலை ஈட்டியுள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் மற்றும் மதகஜராஜாவின் திரை ஆதிக்கத்தால் வசூலில் பின்னடவைக் கண்டாலும், பொங்கல் விடுமுறைகள் மற்றும் வார விடுமுறைகள் ஓரளவு இப்படத்துக்கு கைகொடுக்க வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. விமர்சனத்தை வாசிக்க > காதலிக்க நேரமில்லை: கிருத்திகா உதயநிதியின் ‘புதுமை’ முயற்சி ஈர்த்ததா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT