Published : 13 Jan 2025 10:13 PM
Last Updated : 13 Jan 2025 10:13 PM
சென்னை: என்னுடைய நண்பர்கள், என் சக நடிகர்கள் மீதும் என் ரசிகர்கள் அன்பு செலுத்தி, அவர்கள் குறித்து நல்ல விஷயங்களை பேசினால் மிகவும் மகிழ்வேன் என்று அஜித் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்து வரும் ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித்தின் ரேஸிங் அணி 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது. இதையடுத்து, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த போட்டியின் இடையே யூடியூப் சேனல் ஒன்றுக்கு அஜித் பேட்டியளித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் அளிக்கும் பேட்டி இது. இதில் அஜித் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள். நீங்கள் அனைவரும் என்மீது வைத்திருக்கும் இந்த மிகப்பெரிய அன்புக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருப்பேன்.
என்னுடைய நண்பர்கள், என் சக நடிகர்கள் மீதும் அவர்கள் அன்பு செலுத்தி, அவர்கள் குறித்து நல்ல விஷயங்களை பேசினால் மிகவும் மகிழ்வேன். வாழ்க்கை மிகவும் குறுகியது. நம்முடைய கொள்ளுப் பேரன்கள், பேத்திகள் நம்மை நினைவில் கொள்ளப் போவதில்லை. எனவே இதை மனதில் வைத்து செயல்படுங்கள்” இவ்வாறு அஜித் தெரிவித்தார்.
துபாயில் நடக்கும் ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித் தலைமை யிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்றுள்ளது. இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டபோது, அஜித் ஓட்டிய கார், விபத்தில் சிக்கியது. இந்நிலையில் ரேஸில் இருந்து அவர் விலகினார். ஆனால் அவர் அணி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில், அஜித்குமார் ரேஸிங் அணி 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இந்த வெற்றியைத் தேசிய கொடியை ஏந்தி உற்சாகத்துடன் அஜித் கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்திய அணி ஒன்று சர்வதேச ரேஸில் 3-வது இடத்தைப் பிடிப்பது பெரிய விஷயம் என்கிறார்கள். அதிலும் பங்கேற்ற முதல் போட்டியிலேயே இச்சாதனையைப் படைத்துள்ளதால், நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகர் மாதவன் அஜித்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அது தொடர்பான வீடியோவை வெளி யிட்டுள்ள மாதவன், அஜித் குறித்து தான் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT