Published : 13 Jan 2025 12:25 PM
Last Updated : 13 Jan 2025 12:25 PM
சென்னை: துபாய் கார் ரேஸில் சாதித்த நடிகர் அஜித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது அன்பான அஜித்துக்கு வாழ்த்துகள்! நீங்கள் சாதித்து விட்டீர்கள்! கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக. லவ் யூ!’ என ட்வீட் செய்திருக்கிறார்.
முன்னதாக, துபாயில் நடந்து வரும் ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித் தலைமையிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்றுள்ளது. இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டபோது, அஜித் ஓட்டிய கார், விபத்தில் சிக்கியது. இந்நிலையில் ரேஸில் இருந்து அவர் விலகினார். ஆனால் அவர் அணி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், அஜித்குமார் ரேஸிங் அணி 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது. இதையடுத்து, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகர் மாதவன் அஜித்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த போட்டிக்காகத் துபாய் சென்றுள்ள நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ஆரவ், வசந்த் ரவி, இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் அஜித்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அஜித்குமார் சார் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் 3-ம் இடம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். நமது நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இன்னும் பெருமை சேர்ப்பதற்காக, தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் அஜித்தை பாராட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT