Published : 13 Jan 2025 09:12 AM
Last Updated : 13 Jan 2025 09:12 AM
கன்னியாகுமரியில் கிடைத்த வேலையைச் செய்துகொண்டு, தனது தங்கையுடன் (ரிதா) வசிக்கிறார் மாற்றுத் திறனாளி இளைஞனான கோட்டி (அருண் விஜய்). அவர் மீது, சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்யும் டீனாவுக்கு (ரோஷினி பிரகாஷ்) காதல். அதைச் சட்டை செய்யாத அவன், விளிம்பு நிலை மனிதர்களை யாராவது துன்புறுத்தினால் அவர்களை அடித்துத் துவைக்கும் காளையாகச் சீறுகிறான். அவனது கோபத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றில் காவலாளியாகச் சேர்க்கப்படுகிறான். அங்கே நடக்கும் அவலம் ஒன்று கோட்டியின் கவனத்துக்கு வர, பிறகு அவன் எடுக்கும் ஆக்ரோஷ அவதாரமும் அதனால் அவனைச் சார்ந்தவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் கதை.
ஒரு மாற்றுத் திறனாளியால்தான் மற்றொரு மாற்றுத் திறனாளியின் மனவலியை, அவர்களுடைய உணர்வின் மொழியைப் புரிந்து கொள்ள முடியும் என்கிற பார்வையின் வழியாக, கோட்டி கையிலெடுக்கும் கொடூர வன்முறைக்கு நியாயம் கற்பித்திருக்கிறார், இயக்குநர் பாலா. கோட்டியின் உலகில் அவன்தான் நீதிபதி என்கிற சித்தரிப்பு, பாலாவின் மோல்டில் வார்க்கப்பட்ட அச்சு அசல் அவலக் கதாநாயகர்களின் பட்டியலில் கோட்டி யையும் சேர்த்துவிடுகிறது.
காது கேளாத, வாய்பேச முடியாதவராக நாயகன் இருப்பது கதையின் மைய உணர்வில் மட்டுமல்ல, கதை நகர்விலும் அட்டகாசமான பங்கைச் செலுத்திவிடுகிறது. குற்றத்துக்கான காரணத்தைக் கோட்டியிடமிருந்து அறிந்தால் தவிர, அந்த வழக்கை அடுத்தக்கட்டம் நோக்கி நகர்த்த முடியாது என்கிற நெருக்கடி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டிய காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் ஏற்படுவதன் வழியாக திரைக்கதை வேகமெடுக்கிறது.
விசாரணை அதிகாரியாக சமுத்திரக்கனி உள்நுழைந்த பிறகு, அவர் உண்மையை வரவழைக்க கையாளும் உத்திகள், உண்மையை தோண்டி வெளிக்கொண்டுவரும் சாதுர்யம் ஆகிய காட்சிகள் ஆக்கப்பட்ட விதம் ஈர்க்கிறது. மாவட்ட நீதிபதியாக வரும் மிஷ்கின் கதாபாத்திரம் யார் பக்கம் நிற்கிறது, ஒரு குற்றவழக்கு மீதான அதன் அணுகுமுறை எப்படிப்பட்டது என்பதை வடிவமைத்த விதத்திலும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறார் பாலா.
குற்றம், விசாரணை, தண்டனை எனக் கதை நகர்ந்தாலும் கதை மாந்தர்கள் வாழும் நிலத்தில் மூன்று பெருமிதங்களைச் சேர்ந்தவர்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அங்குள்ள வாழ்க்கையின் வழியாக சொல்லிச்செல்வது மனதை வருடுகிறது.
கோட்டி கதாபாத்திரத்தில், சத்தங்கள், சைகை மொழி வழியாக அருண் விஜய், தரமான நடிப்பைத் தந்திருக்கிறார். அவரது தங்கையாக வரும் ரிதா, ஆழமும் அழுத்தமுமாகத் தனது கதாபாத்திரத்தின் மனச்சிக்கலை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் நின்று, கோட்டிக்காக உருகும் டீனாவாக ரோஷினி பிரகாஷ், துள்ளலான நடிப்பால் அட்டகாசம் செய்திருக்கிறார். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடம் அருகாமையில் உள்ள மதுக்கூட உரிமத்தை ரத்து செய்ய டீனா, பஞ்சாபி மொழியில் பேசி மாவட்ட ஆட்சியரைக் கவரும் காட்சியில் தாய்மொழி மீதான உறவை நச்சென்று சொல்வது ரசிக்க வைக்கிறது.
கோட்டியின் கோபத்தைத் தூண்டும், கதையின் மையமான குற்றக் காட்சியை சித்தரிப்பதில் கையாண்டிருக்க வேண்டிய படைப்பாளிக்கானப் பொறுப்பைச் சட்டை செய்யாதது, வன்முறைக் காட்சிகளில் வழக்கம்போல் ரத்தத்தையும் கோரத்தையும் விஸ்தாரமாக்கி இருப்பது என இயக்குநர் பாலா கோட்டை விட்ட இடங்கள் பல. முக்கியமாக இறுதிக்காட்சியைத் தனது முத்திரை என நினைத்துத் திணித்திருக்கிறார். சில்வா வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு, ஒரு மாற்று ஆக்ஷன் விருந்து.
‘யாரோ நீ யாரோ’ பாடல் மட்டுமே ஜி.வி.பிரகாஷ் இசையில் கவர்கிறது. பின்னணி இசையில் பின்னியிருக்க வேண்டிய சாம்.சி.எஸ். பின்தங்கிவிட்டார். பார்வையாளர்கள், தன்னிடம் எதிர்பார்ப்பதைக் கொடுக்க வேண்டும் என, தான் பழகிய பாதையில் வணங்கானைக் கொடுத்திருக்கும் பாலாவுக்கு இப்படம் உற்சாகமான கம்பேக்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT