Published : 11 Jan 2025 09:55 PM
Last Updated : 11 Jan 2025 09:55 PM

“என் ரசிகர்கள் யாரும் சண்டை போடாதீர்கள்” - அஜித் உருக்கம்

சென்னை: “என் ரசிகர்கள் யாரும் சண்டை போடாதீர்கள். வாழ்க்கை ரொம்ப சின்னது, மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அஜித் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அஜித் பேசுகையில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் மோட்டார் பந்தயங்கள் என்னுடைய ஆர்வமாக இருந்து வருகிறது. நிறைய ரசிகர்கள் நேரில் வந்திருந்தது, உணர்வுப்பூர்வமாக இருந்தது. அதேநேரம் நான் சொல்லவேண்டிய விஷயம் இதுதான். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக, ஆரோக்கியத்துடன், மன நிம்மதியுடன் வாழ நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

உங்களுடைய குடும்பத்தைப் பாருங்கள். நன்றாக படியுங்கள். வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக வேலை பாருங்கள். நமக்கு பிடித்த விஷயத்தில் நாம் கலந்துகொள்ளும்போது வெற்றி பெற்றால் நல்ல விஷயம்தான். ஆனால் ஒருவேளை வெற்றி கிடைக்காவிட்டால் சோர்ந்து போய்விடாதீர்கள். வாழ்க்கையில் போட்டிகள் ரொம்ப முக்கியம். உங்களுடைய ஆற்றலையும், அர்ப்பணிப்பையும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் அனைவரையும் நிபந்தனையற்று நான் நேசிக்கிறேன்.

என்ட்யூரன்ஸ் ரேசிங் மற்ற போட்டிகளைப் போன்று தனிநபர் விளையாட்டு அல்ல. இந்தப் போட்டியில் ஒரு காரில் மூன்று முதல் நான்கு வீரர்கள் இருப்பார்கள். எனவே, நாங்கள் அனைவருமே ஒவ்வொருவரின் திறமைக்குப் பொறுப்பானவர்கள். எனவே, காரை பந்தயத்தில் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில், சிறந்த லேப் டைமிங்கையும் சாதிக்க வேண்டும். இது கார் ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரது பங்களிப்பும் கலந்தது இந்த போட்டி.

சினிமா துறையைப் போலத்தான் இதுவும். எப்படி சினிமாவில் எப்போதும் ஒரு குழுவாக செயல்படுகிறோமோ அதுபோலத்தான் இதுவும். எனவே, எல்லோரும் அவர்களது கடமைகளைத் தானாகவே செய்தால் போதும், முடிவுகள் தானாக வரும். என் ரசிகர்கள் யாரும் சண்டை போடாதீர்கள். வாழ்க்கை ரொம்ப சின்னது, மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அஜித் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x