Published : 11 Jan 2025 08:42 AM
Last Updated : 11 Jan 2025 08:42 AM
காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி நாயகன் ஆதரவற்றோர் இல்லத்தில் காவலராக பணிபுரிகிறார். அங்கு நிகழும் வெளியே சொல்ல முடியாத சம்பவத்துக்கு எதிராக நாயகன் ஆற்றும் எதிர்வினைதான் ‘வணங்கான்’ திரைப்படம்.
கன்னியாகுமரி, ஆழிப்பேரலையில் பெற்றோரை இழந்த கோட்டி (அருண் விஜய்), அவரைப் போலவே திக்கற்று நின்ற தேவியை (ரிதா) சிறுவயது முதலே தனது தங்கையாக வளர்த்து வருகிறார். கிடைக்கிற வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் கோட்டி தன் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறார். இதனால் அவரது தங்கை உட்பட அவருக்கு உதவியாக வரும் அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனிடையே, சுற்றுலா வழிகாட்டியாக பிழைப்பு நடத்திவரும் டீனா (ரோஷினி), கோட்டியை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.
ஒரு நிரந்தரமான வேலை இருந்தால், கோட்டி சரி ஆகிவிடுவார் என்று நம்பும் அவரது நலம் விரும்பிகள், ஆதரவற்ற இல்லம் ஒன்றில் கோட்டியை காவலராக வேலைக்கு சேர்த்து விடுகின்றனர். அந்த இல்லத்தில், குழந்தைகள், பெண்கள் என பல பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களுடன் எளிதில் ஒட்டிக் கொள்ளும் கோட்டியின் வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கிறது.
அப்போது அந்த இல்லத்தில்,வெளியே சொல்ல முடியாத சம்பவம் ஒன்று நடக்கிறது. அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோட்டியிடம் முறையிட, சம்பவத்தில் தொடர்புடையவர்களை அவர் நேரிலும் பார்த்து விடுகிறார். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ‘வணங்கான்’ திரைப்படத்தின் திரைக்கதை.
படத்தின் பலம் கதைக்கரு. நடப்பு சமூகச் சூழலுக்குப் பொருந்திப்போகிற இன்றிமையாத ஒரு விஷயத்தைத்தான் இந்தப் படம் பேசியிருக்கிறது. அச்சம்பவங்களில் தொடர்புடையோருக்கு பாலா கொடுத்திருக்கும் ட்ரீட்மென்ட்கள் சரியா, தவறா என்பது வேறு. சமூகப் பொறுப்புணர்வு கொண்ட ஒரு படைப்புதான் ‘வணங்கான்’ என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், பார்வையாளர்களிடம் அதைக் கொண்டுசேர்ப்பதில்தான் பாலா சறுக்கிவிட்டார். இந்த சறுக்கல், பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்குவதற்கு பதிலாக, இதுபோன்ற சம்பவங்களை டிவி, பத்திரிகைகளில் பார்க்கும்போது ஏற்படும் கழிவிரக்கமாக சுருங்கி விடுகிறது.
படத்தின் முதல் பாதியில் தனது கதைக்களம், கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி, பார்வையாளர்களை கதையோட்டத்தில் கலந்திட முயற்சித்திருக்கிறார் பாலா. ஆனால், அது எதுவுமே க்ளிக் ஆகவில்லை. அந்த 30-40 நிமிடங்கள் பாலா ஏதாவது செய்திருப்பார்? என்ற ஒற்றை நம்பிக்கையில் காத்திருப்பவர்களுக்கு, அதன்பின் வரும் காட்சிகள் ஒருவித நம்பிக்கையை தருகிறது. குறிப்பாக, இடைவேளைக் காட்சியின் அந்த கடைசி ஃப்ரேம்.
சரி, இரண்டாவது பாதியில் தொய்வுகள் சரியாகிவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம், பழிவாங்கல் திரைப்படங்களுக்கான பழமையான டெம்பிளேட்டில் படம் பயணிக்கிறது. குற்றவாளிகளை அடையாளம் காணும் நாயகன் அனைவரையும் பழிதீர்ப்பார். ஒரே ஒருவரை மட்டும் கொலை செய்வதற்கு முன்பாக போலீஸில் சிக்கிக்கொள்வார். அடுத்த என்ன நடக்கும் என்பதெல்லாம் ஜென் எக்ஸ் (1965-80), மில்லினியல்ஸ் (1981-96) யுகத்தாருக்கு மனப்பாடமாகத் தெரியும். எனவே, எளிதில் ஊகிக்கக் கூடிய அடுத்தடுத்த காட்சிகளால் படம் எங்கேஜிங்காக செல்லாமல் தொய்வடைகிறது.
அதேபோல் படத்தின் முதல் பாதியில் கிட்டத்தட்ட 3 பாடல்கள், 3 சண்டைக் காட்சிகள் வருகிறது. அவை பார்வையாளர்களை படத்தில் இருந்து அந்நியமாக்கிவிடுகிறது. அதேநேரம், ‘ஆய்வாளர் ஆயவே இல்லையா!’, ‘அவர்கள் எங்கே பிடித்தார்கள், நான்தான் சரணடைந்தேன்... என்னைப் பார்த்து அவர்கள் பயந்துவிட்டனர்’ போன்ற வசனம் வரும் இடங்களிலும், போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை டீல் செய்த விதம், வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதியாக வரும் மிஷ்கின் ‘லார்ட்ஷிப்’ என கூப்பிட வேண்டாம், சட்டத்தில் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை, ஐயா சாருனு கூப்பிடுங்கள்’ என்ற வசனங்கள் வரும் இடங்களிலும் காவல் துறை, நீதித் துறை குறித்த பாலாவின் பகடி சிரிப்பை வரவைக்கிறது.
அதேபோல் இரண்டாம் பாதியில், ‘எல்லாருமா சேர்ந்து ஒரு நல்லவனை சிலுவையில் அறைந்துவிடாதீர்கள்’, ‘எங்களுக்கு கண்ணுதான் இல்லை... ஆனால் கண்ணீர் வரும்’, ‘எல்லாம் நல்லா இருக்கிற உங்களால மாற்றுத் திறனாளிகளான எங்களோட வலியை எப்படி உணர முடியும்?’ போன்ற வசனங்களால் கவனிக்க வைத்திருக்கிறார் பாலா.
படத்தை ஒற்றை ஆளாக தூக்கி சுமக்கும் அருண் விஜய் தனது பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார். இடைவேளை, இறுதிக் காட்சி மற்றும் அதற்கு முந்தையக் காட்சிகளில் பாலாவின் ‘டச்’சில் ஹீரோவை ரசிப்பதற்காக வரும் சில ஃப்ரேம்களில் அருண் விஜய் சிறப்பாக இருக்கிறார். நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்த அழுவதுதான் சிறந்த வழியாக இருக்கும் என்ற சிந்தனையை கோலிவுட் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் சில இடங்களில் எண்ணவும் தோன்றுகிறது.
நீதிபதி குபேரனாக வரும் இயக்குநர் மிஷ்கின் கவனம் ஈர்க்கிறார். அதேநேரம், காவல் துறை சிறப்பு அதிகாரியாக வரும் இயக்குநர் சமுத்திரக்கனி பட்டும் படாமல் நடித்திருப்பது போன்ற உணர்வை மட்டுமே தந்திருக்கிறார். விறைப்பாக நடந்து கொள்வதால் மட்டுமே அவர் ஒரு நேர்மையான கறாரான அதிகாரி என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேவி பாத்திரத்தில் வரும் ரிதா சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி ரோஷினி கதாப்பாத்திரம் ‘பிதாமகன்’ நாயகியை மனதில் வைத்து எழுதப்பட்டிருக்கும் போல, கொஞ்சம்கூட பொருந்தவேயில்லை.
பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்திருக்கிறார். டைட்டில் கார்டுக்கான ஸ்கோர் பிரமிப்பைத் தரும் அதேநேரத்தில், படத்தினுள் ஒருசில காட்சிகளுக்கு மட்டுமே பலம் சேர்த்திருக்கிறது. அருண் விஜய் என்ட்ரி காட்சியில் ஸ்லோகத்துடன் வரும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.
அதேபோல், படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் படத்துக்குப் பொருந்தியிருந்தாலும் மனதில் எதுவும் நிற்கவில்லை. ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் கேமரா குமரிக்கடலில் உயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும், படகு போக்குவரத்தையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் வானம் தொடுகிறது.
இது தவிர வழக்கமாக பாலா திரைப்படங்களில் வரும் நாயகனின் செம்பட்டை ஹேர் ஸ்டைல், திருநங்கை, போலீஸ், தேவாலயம், சர்ச் ஃபாதர், கிறிஸ்தவ மதம் குறித்த பகடி, மாமி, கோர்ட், ஹைப்பர் ஆக்டிவ் நாயகி, ஹீரோவிடம் அடிவாங்கும் நாயகி, ரயில், ஆதரவற்றோர் இல்லம், மாற்றுத் தினாளிகள், சிறப்புக் குழந்தைகள், வக்கிரம், கெட்டவர்களுக்கு எதிரான நாயகனின் மூர்க்கத்தனமாக தாக்குதல், போலீஸ் ஸ்டேஷனுக்குள் காவலர்களை அடிப்பது என ஒன்றுகூட மிஸ் ஆகாமல் இந்தப் படத்திலும் இருக்கிறது.
ஓடிடி தளங்களின் வருகை மக்களின் சினிமா குறித்தப் புரிதலை விசாலமாக்கி, ரசனையை மேம்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், பாலா எழுத்து இயக்கத்தில் வரும் திரைப்படம் என்பதால், இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு முழுமையாக பூர்த்தியாகவில்லை. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்கள் முடிந்து வெளியே வரும்போது நம் மனங்களை அழுந்தப் பிடித்திருந்த பாலாவின் கரங்களில் இருந்து மீண்டும் ஒருமுறை நழுவியிருக்கிறது இந்த ‘வணங்கான்’!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT